யாழ்ப்பாணத்தில் செம்மணி என்ற இடத்தில் கடந்த முப்பத்திரண்டு நாட்களுக்கு மேலாகத் தோண்டப்பட்டு வந்த மனிதப் புதைகுழிகளில் இருந்து நூற்று நாற்பத்து ஏழு மனித எலும்புத் தொகுதிகள் மீட்கப்பட்ட நிலையில், இந்தப் பணிகள் கடந்த ஆகஸ்ட் ஆறாம் தேதி தற்காலிகமாய் நிறுத்தப்பட்டிருந்தன. இவற்றின் அறிக்கைகள் யாழ்ப்பாண நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் எதிர்வரும் இருபத்திரண்டாம் தேதி முதல் ஆரம்பமாகும் என்று சொல்லப்பட்டு இருக்கிறது.
மனித உரிமை மீறலின் உச்சமாக அடையாளப்படுத்தப்பட்டு இருக்கும் இப்படுகொலைகள், நாஸி ஜெர்மனியினர் இரண்டாம் உலகப் போரின்போது யூதர்களைப் பதைபதைக்கச் சித்திரவதை செய்ததோடு ஒப்பிட்டு நோக்கப்படுகின்றன. தோண்டத் தோண்டப் புதையல் போலக் கிளம்பி வரும் மனித எலும்புக் கூடுகள், ராணுவத்தின் கோரப் பக்கங்களைப் படம்பிடித்துக் காட்டிக் கொண்டிருக்கின்றன.
முதன்முறையாகச் சிங்களச் சமூகத்துக்குள் ராணுவத்தின் பயங்கரங்கள் தொடர்பான விரிவான உரையாடல்கள் நடக்கின்றன.கடந்த வாரம் செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பாய் ஒரு புத்தகம் கூட முற்போக்கு சிங்கள ஊடகவியலாளர்கள் சிலரால் வெளியிடப்பட்டு இருந்தது. அதாவது, வழக்கத்திற்கு மாறாக இந்த விவகாரம் பலதரப்பட்ட பெரும்பான்மைச் சமூக மக்களின் மனசாட்சியையும் உலுக்கி எடுத்து இருக்கிறது.















Add Comment