1960ம் ஆண்டு சிங்கப்பூர் அதிபர் லீ க்வான் யூ, இந்தியப் பிரதமர் ஜவாஹர்லால் நேருவைச் சந்தித்தார். பிறகு நேருவைக் குறித்து மிகவும் வியந்து பாராட்டிப் பதிவு செய்திருக்கிறார். அன்றைக்கு நேருவின் உயரம் அப்படி. உலக அரங்கில் இந்தியாவின் உயரம் அத்தகையது. ஆனால் நேருவாலும் இங்கே சாதிக்க முடியாததை லீ எப்படி சிங்கப்பூரில் சாதித்தார்? மொத்த உலகும் அண்ணாந்து பார்க்கும்படியாக ஒரு தேசத்தை எப்படிக் கட்டமைத்தார்?
சுமார் 418 சதுர கிலோ மீட்டர் பரப்பளவே கொண்ட நாடு சிங்கப்பூர். இப்போதைய மக்கள் தொகை சுமார் ஐம்பத்தைந்து லட்சம். தமிழ், மலாய், சீனம் மற்றும் ஆங்கிலம் ஆகிய நான்கு மொழிகளும் ஆட்சி மொழிகளாக உள்ளன. சீன சிங்கப்பூரியர்கள் 74 சதவீதம், மலாய் சிங்கப்பூரியர்கள் 14 சதவீதம், தமிழ் சிங்கப்பூரியர்கள் 11 சதவீதம். மொத்தத்தில் 95 சதவிகிதம் படிப்பறிவு கொண்ட நாடு.
சிறிய நாடுதான். ஆனால் தனி நபர் சராசரி ஆண்டு வருமானம் சுமார் 47 லட்சம் ரூபாய். உலக அளவில் இது நான்காவது இடம்.
சிங்கப்பூர் சின்னஞ்சிறு நாடு. நாடு கூட அல்ல, சென்னையை விடச் சிறிய ஒரு நகரம். ஆனால் உலகின் பல சக்தி வாய்ந்த நாடுகளை விடத் தனது மக்களை வளமாக வைத்திருக்கும் ஒரு நாடு. எப்படி இது சாத்தியம்?