சிங்கப்பூர் நாடாளுமன்றத் தேர்தலில் பதிநான்காவது முறையாக மீண்டும் வெற்றி பெற்றுள்ளது மக்கள் செயல் கட்சி. மொத்தமுள்ள தொண்ணூற்று ஏழு தொகுதிகளில் எண்பத்து ஏழு தொகுதிகளைக் கைப்பற்றிப் பெரும் வெற்றி பெற்றுள்ளது. தொடர்ந்து அறுபத்தைந்து ஆண்டுகளாகச் சிங்கப்பூரில் ஆட்சி அமைத்துக் கொண்டிருக்கிறது இக்கட்சி. சிங்கப்பூரின் புதிய பிரதமராகப் பதவியேற்றிருக்கிறார் லாரன்ஸ் வாங் ஷைன் சாய் (Lawrence Wong Shyun Tsai).
உலகப் பொருளாதார மன்றத்தின் (World Economic Forum) அறிக்கையின்படி உலக நாடுகளில் சிங்கப்பூர் மட்டுமே போட்டி நாடாக உள்ளது. அனைத்து வகையான வாய்ப்புகளும் கொண்ட நாடு. வர்த்தகத்துக்கு ஏற்ற நாடு. அதிகளவு வரிச் சுமைகள் இல்லாத நாடு எனப் பொருளாதாரச் சுதந்தரக் குறியீடு (Economic Freedom Index) சிங்கப்பூரைப் பற்றிக் கூறியுள்ளது. தொழில் தொடங்க ஏற்ற நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது சிங்கப்பூர்.
இத்தனைச் சிறப்புகள் கொண்டுள்ள இந்த நாட்டில் சொல்லிக் கொள்ளும்படி இயற்கை வளங்கள் கிடையாது. அந்நாட்டுக்குத் தேவையான எண்பது சதவிகிதத்துக்கும் மேலான பொருள்களை இறக்குமதி செய்கிறது. ஆனாலும் பொருளாதார ரீதியில் சக்தி வாய்ந்த நாடாக உள்ளது சிங்கப்பூர். ஐம்பது ஆண்டுகளாகத்தான் இத்தனை செல்வச் செழிப்பான நாடாக உருவாகியுள்ளது. அதற்கு முன்பு வறுமையின் கோரப் பிடியில் சிக்கியிருந்தது. பஞ்சமும் பட்டினியுமாக இருந்த நாடு. அப்படியிருந்த நாட்டை இப்படி மாற்றியவர் மக்கள் செயல் கட்சியின் நிறுவனரும் அதன் தலைவருமாக இருந்த லீ வான் யூ. அவர் உருவாக்கிய பலமான அடித்தளத்தில், தொடர்ந்து அறுபத்தைந்து ஆண்டுகளாக அக்கட்சி ஆட்சி புரிந்து கொண்டிருக்கிறது.














Add Comment