x. அமெரிக்கா
பல நாட்டவரின் திறமைகளை உள்வாங்கி ஊக்குவிக்கும் அமெரிக்கா, பல நாடுகளின் சண்டைக்கலைகளையும் பாராட்டி ஊக்குவித்து வளர்த்தது. ஜப்பானிய, கொரிய, சீன, பிலிப்பைனிய சண்டைக்கலைகளை உள்வாங்கி அதில் அப்படியே தேர்ச்சி பெற்றும், அமெரிக்கப் பயிற்சிக்கு ஏற்றபடி அவற்றை மாற்றி வடிவமைத்தும் தன் சண்டைக்கலைகளை அமெரிக்கா வளர்த்தது.
அமெரிக்கக் குத்துச்சண்டையின் முகமாக முகமது அலி விளங்கினார். அமெரிக்காவில் மட்டுமல்லாது உலகின் பல நாடுகளிலும் முகமது அலிக்கு ரசிகர்கள் இருந்தனர், இப்போதும் இருக்கின்றனர். முகமது அலிக்கு முன்பும் பல வீரர்கள் அமெரிக்கக் குத்துச்சண்டையில் உலகப் புகழ் பெற்றிருப்பினும், அலிக்குப் பின்னர் அமெரிக்கக் குத்துச்சண்டை பெற்ற புகழ் வியக்கத்தக்கது. அமெரிக்காவின் ஸ்போர்ட்ஸ் இல்லஸ்ட்ரேட்டட் இதழ் குத்துச்சண்டை வீரர் முகமது அலியை ‘நூற்றாண்டின் சிறந்த விளையாட்டு வீரர்’ என 1999ஆம் ஆண்டு அழைத்தது.
1980ஆம் ஆண்டு முகமது அலி சென்னைக்கு வந்தார். அவருடைய குத்துச்சண்டைப் போட்டி ஒன்று சென்னையில் கண்காட்சிப் போட்டியாக ஏற்பாடு செய்யப்பட்டது. சென்னை வந்த முகமது அலி எம்.ஜி.ஆரையும் கருணாநிதியையும் சந்தித்துச் சென்றது வரலாறு.
Add Comment