சக்கரங்கள் இல்லாமல் ஓடு தளத்தில் சிராய்த்து கொண்டே சென்ற ஒரு விமானம் அங்கிருந்த ஒரு சுவரின் மீது மோதி வெடிக்கிறது. 179 பேர் இறந்துவிட, இருவர் மட்டும் உயிர் பிழைத்தனர். இந்த விமான விபத்துடன் சென்ற வருடத்தை நிறைவு செய்த தென் கொரியாவில் அரசியல் குழப்பங்கள் இப்போது தான் தொடங்கியுள்ளன.
எல்லாம் ஒரு டியோர் ஹாண்ட்பேகிலிருந்து தொடங்கியது. மூன்று மில்லியன் ஒன் (தென் கொரியப் பணம்) மதிப்புள்ள இதை நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் பரிசாகப் பெற்றுக்கொண்டார் அதிபர் யூனின் மனைவி கிம். கேமராவில் பதிவான இது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. ஏற்கனவே பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட் ஊழல்களுக்குப் பெயர்போன இவர்மீது வழக்கு விசாரணை நடந்து வருகிறது. பணவீக்கத்தாலும், விலைவாசி உயர்வாலும் தென் கொரிய மக்களின் ஒட்டுமொத்த கோபத்திற்கு ஆளாகினார் அதிபர் யூன்.
தென் கொரியாவில் இரண்டு தேர்தல்கள் நடத்தப்படும். நாட்டின் அதிபர் ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுவார். நான்கு வருடங்களுக்கு ஒருமுறை நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். பிரதமரை நியமிக்கும் முதல் அதிகாரமும் அதிபருக்கே உண்டு. அதிபர் யூன் இரண்டு வருடங்களுக்கு முன்னர் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் அதிபரானார். சென்ற 2024ம் வருடம் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சி பெரும்பான்மை வெற்றியைப் பெற்றது. அன்றிலிருந்து ஆரம்பித்தது அவருக்குத் தலைவலி. மக்கள் ஆதரவும் இல்லை, சொந்தக் கட்சியிலும் பிளவுகள், கொஞ்சமும் விட்டுக்கொடுக்காத எதிர்க்கட்சியினரின் நாடாளுமன்றம். நாட்டின் முதன்மை அதிகாரம் பெற்ற அதிபருக்கு இந்த நிலை. நாட்டின் முதன்மை அதிகாரத்தை மட்டும் வைத்துக்கொண்டு என்ன செய்வார் அதிபர்?
Add Comment