இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளின் ஓய்வூதியத்தைத் தவிர அத்தனை சிறப்புச் சலுகைகளையும் பறிக்கும் வரலாற்றுச் சிறப்புமிகு சட்ட வரைவு இலங்கை நாடாளுமன்றத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 10ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது.
‘முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகள் ஒழிப்பு’ என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அரசு கோஷம் போடத் தொடங்கிய ஆரம்ப நாள்களில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சேவின் புதல்வர் நாமல் ராஜபக்சேவும் அடிப்பொடிகளும் பலமாய்க் கதற ஆரம்பித்தார்கள். முடிந்தால் மகிந்த ராஜபக்சேவை வீட்டை விட்டு வெளியேற்றுமாறு சவால் விட்டார்கள். ‘சரி, நாங்கள் வீட்டைக் காலி பண்ணுகிறோம், முறையாய்க் கடிதம் தா’ என்று ஏளனம் செய்தார்கள். இப்போது கடிதத்துக்குப் பதிலாய் 1986ஆம் ஆண்டின் சிறப்புச் சலுகைச் சட்டத்துக்கே சமாதி கட்டித் தன் தேர்தல் கால வாக்குறுதியை நிறைவேற்றி இருக்கிறது அரசு.
மகிந்த ராஜபக்சேவின் பங்களா பற்றி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தேர்தல் மேடைதோறும் பேசியிருந்தார். ‘கொரோனா காலத்தில் மகிந்த ராஜபக்சேவும் மனைவியும் அதில் குடியேறினார்கள். வந்து ஆறு மாதங்களிலேயே மகிந்தவுக்கு வீடு பிடிக்கவில்லை. 47 கோடி ரூபாய் செலவில் வீட்டைப் புனர் நிர்மாணம் செய்தார். 2020 முதல் 2022 வரையான அந்தக் காலகட்டத்தில் மக்கள் பொருளாதார நெருக்கடியில் மூச்சுத் திணறிக் கொண்டு இருந்தனர். இவர்களா இந்நாட்டின் நிர்வாகிகள்? வெறும் இருவர் வாழ்வதற்கு முப்பதாயிரத்து ஐந்நூறு சதுர அடியில் வீடு எதற்கு? நாம் இந்த வீட்டைக் கையகப்படுத்துவோம். மகிந்த ராஜபக்சேவுக்கும் அவர் மனைவிக்கும் வசிப்பதற்கு வீடு இல்லாவிட்டால், இரண்டு பேர் வாழக் கூடிய பொருத்தமான வீட்டை வழங்குவோம்’ என்றார்.














Add Comment