வேண்டாம் சோதனை!
ரஜினி பறந்து சென்று உச்சியில் அமர அவர் நடித்த படங்களின் வெற்றிகள் மட்டுமே காரணமல்ல. அவரது பண்பும், அர்ப்பணிப்பும் கூடத்தான். தன்னை நம்பி படம் எடுக்கும் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் வந்துவிடக் கூடாது என்று எப்போதுமே நினைப்பார். இன்றைக்கு சூப்பர் ஸ்டார் என்று அனைவரும் கொண்டாடுகிறார்கள். அதற்கான முனைப்பு அவருக்கு நாற்பத்தைந்து வருடங்களுக்கு முன்பே வந்து விட்டது.
ஆறிலிருந்து அறுபது வரை படத்தில் நடிக்கும்பொழுது அந்தப் படம் நன்றாக வரும் என்ற நம்பிக்கையே இல்லை அவருக்கு. ‘ஏதோ தப்பா இருக்கு சார்’ என்று சொல்லிக் கொண்டே இருந்திருக்கிறார். முத்துராமனும் பஞ்சு அருணாசலமும் அவரிடம் பேசினார்கள்.ஐந்தாயிரம் அடி வரை படம் எடுத்து உங்களுக்குப் போட்டுக் காட்டுகிறோம், பாருங்கள். உங்களுக்குப் பிடித்தால் இந்தப் படத்தைத் தொடரலாம். இல்லையென்றால் வேறு கதை பார்க்கலாம் என்று சொல்லிவிட்டனர். நடித்து முடித்த பின் அதைப் போட்டுப் பார்த்தார் ரஜினி.
‘மன்னிக்கணும் சார். எனக்குப் புரியல என்ன மாதிரியான ஒரு படத்துல நடிக்கிறோம்னு. அப்படியே தொடர்ந்துவிடலாம்’ என்று சொல்லி நடித்துக் கொடுத்தார். அந்தப் படம் சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர் உள்படப் பல விருதுகள் வாங்கியது. இந்தப் படத்துக்குப் பின் பஞ்சு அருணாசலம், முத்துராமன் படங்களைக் கேள்விகள் கேட்காமல் நடித்து விடுவார். அந்த நம்பிக்கைக்குத் தக்கபடி எந்தப் படமும் சோடை போனதே இல்லை.










Add Comment