சிரியாவில் எங்கு பார்த்தாலும் வெடி வெடிக்கிறது. இரண்டாவது முறை விடுதலை அடைந்ததைப் போல, நாடு முழுவதும் கொண்டாட்டங்கள். சிரிய அதிபர் பஷார் அல் அசாத்தின் இருபத்து நான்காண்டுகள் சர்வாதிகார ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. அதற்கு முன்னர் அவரது தந்தை ஹஃபீஸ் அல் அசாத்தின் அதிகாரத்தில் ஒரு முப்பதாண்டுகளைக் கழித்திருந்தது சிரியா.
1946 ஆம் ஆண்டு விடுதலை பெற்றிருந்தாலும், முதல் இருபத்தைந்து வருடங்களும் நிலையற்ற ஆட்சியே சிரியாவுக்கு வாய்த்தது. பின்பு தந்தை மற்றும் மகனின் சர்வாதிகார ஆட்சி. இன்று மறுபடியும் சுதந்திரம் கிடைத்துள்ளதென்று மக்கள் கொண்டாடினாலும், வாய்க்கப்போவது மீண்டும் ஒரு நிலையற்ற ஆட்சியாக இருக்கவே வாய்ப்புகள் அதிகம். அதுவரையாவது கொண்டாடிவிட்டுப் போகட்டும். வீடுகளை விட அகதிகள் முகாம்களை அதிகம் கொண்டிருக்கிற சிரிய மக்களுக்கு இந்தத் தற்காலிக மகிழ்ச்சியாவது கிடைக்கட்டும்.
பிரான்ஸ் நாட்டின் பிரதமர் மூன்றே மாதங்களில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு பதவியை இழந்துள்ளார். இந்த வருடத்தின் நான்காவது பலிகடாப் பிரதமரை, மிகுந்த தைரியத்தை வரவழைத்துக் கொண்டு நியமித்திருக்கிறார் அதிபர் மேக்ரோன். லண்டனுக்கும் கிட்டத்தட்ட இதே நிலைமைதான். வருடத்திற்கு ஒரு பிரதமர் தேர்வாகிறார். ஜெர்மனியும் புதிய பிரதமருக்குக் காத்திருக்கிறது. ஆட்சிக் கவிழ்வது சாதாரண நிகழ்வாகிவிட்ட காலத்தில், சிரியா மட்டும் ஏன் இந்த பட்டியலில் முக்கியமான இடம்பிடித்திருக்கிறது?
Add Comment