மோசஸ் வீராசாமி நாகமுத்து
தென் அமெரிக்காவின் வடகிழக்குக் கடற்கரையில் அமைந்துள்ள கயானாதான் அந்தக் கண்டத்திலேயே ஆங்கிலத்தை ஆட்சி மொழியாகக் கொண்ட ஒரே நாடு. வெனிசுவேலா, பிரேசில், சுரினாம் ஆகிய நாடுகளுக்கு இடையே அமைந்துள்ள இந்த நாட்டின் பிரதமராகவும், முதல் துணைக் குடியரசுத் தலைவராகவும் தமிழர் ஒருவர் பதவி வகித்திருக்கிறார். அவருடைய பெயர் மோசஸ் வீராசாமி நாகமுத்து.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழிருந்த கயானாவுக்கு இந்தியாவிலிருந்தும் ஆப்பிரிக்காவிலிருந்தும் விவசாய வேலைகளுக்காக மக்களை அழைத்து வந்தனர். இன்றைக்கும் கயானாவின் பெரும்பான்மையான மக்கள் இந்திய மற்றும் ஆப்பிரிக்க வம்சாவளியைச் சேர்ந்தவர்களாக இருக்கின்றனர். அப்படி மதராஸிலிருந்து கயானாவுக்கு இடம்பெயர்ந்த குடும்பங்களில் மோசஸ் வீராசாமி நாகமுத்துவின் குடும்பமும் ஒன்று.
வீராசாமியின் தந்தை நாகமுத்து ராமசாமியும் தாயார் கங்கம்மாவும் கயானாவிலேயே பிறந்து வளர்ந்தவர்கள். அவருடைய தாத்தா பாட்டியினர்தான் இந்தியாவிலிருந்து கயானாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்கள். இந்தியா சுதந்தரம் பெற்ற அதே ஆண்டில் கயானாவின் பெர்பிஸ் பகுதியில் உள்ள விம் என்ற கிராமத்தில் மோசஸ் வீராசாமி பிறந்தார். கயானாவில் சுதந்தரப் போராட்டம் தீவிரமாக இருந்த அவருடைய பதினான்கு வயதிலேயே அரசியலுக்கு வந்துவிட்டார். அப்போது மக்கள் முற்போக்கு கட்சியில் இணைந்து பணியாற்றினார். கயானா 1966ஆம் ஆண்டு பிரிட்டிஷிடமிருந்து சுதந்தரம் பெற்றது.










Add Comment