42. திருவிளையாடல்
பெரும்பிழை செய்தேன். மன்னிக்க இயலாத பிழை. எந்த நோக்கம் கொண்டு முதல் முதலில் நான் அவனது சிந்தைக்குள் புகுந்தேனோ, அந்நோக்கம் இறுதிவரை நிறைவேறாது போகுமானால் அதற்காக நான் வருந்த நியாயமில்லை. ஆதிப் பெருந்தனிமம் தோன்றிய உயிர்களுக்கும் தோன்றாத சொல்லுக்குமே வழி நெடுக வாய்ப்புகளை விதைத்துத்தான் சென்றிருக்கிறது. தவற விடுவதில் எத்தனை அக்கறை செலுத்தியிருக்கிறேன். சார்வாகனின் சிந்தைக்குள் இருந்து வெளியேறி, பாரதாய தத்தனின் சிந்தைக்குள் நான் புகுந்திருக்கலாகாது. அதுவல்ல அதற்குரிய சமயம். மனித மனங்களுக்குள் நுழைந்து பார்க்கத் தொடங்கியதில் இருந்து மனிதர்களைப் போலவே நானும் ஆர்வக் குறுகுறுப்பு அடையத் தொடங்கியிருக்கிறேன். சித்தங்களை அளைவதில் பித்து நிலை கொள்ள ஏதுமில்லை. ஆயினும் எந்தத் தருணத்தில் யார் என்ன நினைக்கிறார்கள் என்று அறிந்துகொள்வதில் இயல்பாக ஓர் ஆர்வம் கூடிவிடுகிறது. இதை நான் தவிர்க்க வேண்டும். ஓர் அனூபத்தினை* நிகர்த்த நிதானமே செயலுக்கு ஊறு செய்யாதிருக்கும்.










Add Comment