விஐபி குற்றவாளிகளுக்கு பிரசித்தி பெற்ற திகார் சிறைச்சாலை புதிய இடத்துக்கு மாற்றப்படுகிறது. டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா, இடமாற்றப் பணிகளுக்குப் பத்துக் கோடி பட்ஜெட் அறிவித்திருக்கிறார். கைதிகளின் நலனுக்காகத் தற்போதுள்ள திகார் சிறை வளாகத்தின் நெரிசலைக் குறைக்க, புதிய சிறை வளாகத்தை உருவாக்குவதற்கான புதிய திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
திகார் சிறைச்சாலை 1958ல் நிறுவப்பட்டது. டெல்லியிலிருந்து பதின்மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ளது திகார் கிராமம். டெல்லி சிறையின் உள்கட்டமைப்பை விரிவாக்கும் பொருட்டு திகார் சிறைச்சாலை தொடங்கப்பட்டது. திகார் சிறைச்சாலை முதலில் பஞ்சாப் மாநிலத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. பிறகு 1966ல் டெல்லி அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. நானூறு ஏக்கர் பரப்பளவில், இந்தியாவின் மிகப்பெரிய சிறைச்சாலை வளாகமாகத் திகழ்கிறது. ஆரம்பத்தில், பத்தாயிரம் கைதிகள் தங்குவதற்கேற்ப அது வடிவமைக்கப் பட்டது. இன்று, இருபதாயிரம் சிறைவாசிகளால் நிரம்பி வழிகிறது. கூட்ட நெரிசலையும் பாதுகாப்பு சவால்களையும் கட்டுப்படுத்த புதிய சிறை வளாகம் அமைக்கப்படுகிறது. இச்சிறை வளாகத்தை டெல்லியின் நரேலா பகுதியில் கட்ட திட்டமிட்டிருக்கிறார்கள்.
திகார் சிறைச்சாலை ஆரம்ப நாள்களில், மத்தியச் சிறை, முகாம் சிறை என்று இரு பிரிவுகளைக் கொண்டிருந்தது. முகாம் சிறையில் பெரும்பாலும் போராட்டக்காரர்கள் அடைக்கப்பட்டார்கள். சிறைப் பணியாளர்களின் குடியிருப்புகள் இந்த பகுதிக்கு வெளியே அமைந்திருந்தன. சிறைச்சாலையின் நுழைவு வாயிலைக் கடந்ததும், சிறையின் வரவேற்பு பகுதி இருந்தது. அங்கிருந்து ஒரு நடைபாதை சந்திப்பு அறைக்குச் செல்லும். அங்குக் கைதிகள் தங்களது குடும்பத்தினரைச் சந்திக்க அனுமதிக்கப்படுவார்கள். சிறைவாசிகளின் கணக்கெடுப்பு தினமும் மாலை ஐந்து மணிக்கு நடைபெறும். அதற்குப் பிறகு அவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள். கைதிகளின் விடுதலை உத்தரவுகள், ஜாமீன் குறித்த அறிவிப்புகள் மாலை 5 முதல் 6 மணிக்குள் மாவட்ட நீதிமன்றங்களிலிருந்து வந்து சேரும். உயர் நீதிமன்றத்திலிருந்து வரும் அறிவிப்புகள் இரவு 9 முதல் 10 மணிக்குள் வந்தடையும்.
Add Comment