டைம்ஸ் பத்திரிகை வழங்கும் 2025ஆம் ஆண்டின் சிறந்த குழந்தைக்கான விருது சென்ற வாரம் அறிவிக்கப்பட்டது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பதினேழு வயதான தேஜஸ்வி மனோஜ் இவ்விருதை வென்றுள்ளார். ஷீல்ட் சீனியர்ஸ் என்னும் இணையதளத்தை உருவாக்கியதற்காக அவருக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. அறுபது வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் தங்களை ஆன்லைன் மோசடிகளிலிருந்து தற்காத்துக் கொள்ள அவர் இந்த இணையதளத்தை உருவாக்கியுள்ளார்.
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ளது லெபனான் டிரெயில் உயர்நிலைப் பள்ளி. அங்கு சாரணர் முகாம் முடிந்து தேஜஸ்வி தனது தந்தை மனோஜுடன் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். ஐந்து அழைப்புகளைத் தவற விட்டிருக்கிறீர்கள் என்ற அறிவிப்பு மனோஜின் தொலைபேசியில் மின்னியது. தேஜஸ்வியின் தாத்தாவிடம் இருந்து அவ்வழைப்புகள் வந்திருந்தன. மனோஜ் திரும்ப அழைத்தார்.
நம் உறவினர் ஒருவரிடம் இருந்து அவசரமாக 2,000 டாலர் பணம் வேண்டி மின்னஞ்சல் வந்துள்ளது என்று தாத்தா கூறினார். அந்தப் பணத்தை அவருக்கு எப்படி அனுப்புவது என்று அப்பாவியாகக் கேட்டிருக்கிறார். நிலைமையைப் புரிந்து கொண்ட மனோஜ் அந்த உறவினரை அழைத்து விசாரித்து இருக்கிறார். தான் எந்த மின்னஞ்சலும் அனுப்பவில்லை என்று அவரிடமிருந்து பதில் வந்தது. நல்வாய்ப்பாகத் தேஜஸ்வியின் தாத்தா எந்தப் பணப் பரிவர்த்தனையும் செய்யவில்லை. தனது தாத்தாவின் அப்பாவித்தனம் குறித்த கவலையை விட, வயதான ஒருவரின் அறியாமையைக் குறிவைத்து நடந்த மோசடி தேஜஸ்வியை மிகவும் பாதித்தது.














Add Comment