மனிதன் விரைவில் செவ்வாய்க் கிரகத்துக்குச் செல்ல வேண்டும். வீடு கட்டிக் குடியிருக்க வேண்டும் போன்ற கனவுகளை நோக்கி அறிவியல் உலகம் ஆராய்ச்சி செய்து வருகிறது. ஆறு வருடங்கள் பொறுத்துக் கொள்ளுங்கள், நாங்கள் எங்கள் இலக்கை நெருங்கிவிடுவோம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். நாசா நல்ல நாள் குறிப்பது போல் 2030-ஆம் ஆண்டில் அது நிறைவேறும் என்று வாக்கு கொடுத்துள்ளது.
செவ்வாய்க்குப் போகலாம் என்று சட்டென்று முடிவெடுத்து நீங்களோ நானோ அல்ல விண்வெளி வீரர்கள்கூடச் செல்ல முடியாது. ஒரு பேச்சுக்குச் செல்கிறார்கள் என்றால், பாதி வழியிலே அவர்கள் உடல்கள் பஞ்சாக உதிர்ந்து விண்வெளியில் கலந்துவிடும். இன்று மட்டுமில்லை…. என்றுமே விண்வெளிப் பயணம் என்பது சவாலான விஷயம்.
போயிங் நிறுவனத்தின் புதிய விண்கலமான ஸ்டார்லைனரை சோதிக்க, விண்வெளிக்குச் சென்ற சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புச் வில்மோர் திட்டமிட்ட படி இன்னும் பூமிக்குத் திரும்பவில்லை. இயந்திரத்தில் ஹீலியம் கசிவு ஏற்பட்டுள்ளது. விரைவில் அவர்கள் பூமி திரும்ப அனைத்து ஏற்பாடுகளும் போயிங் நிறுவனத்துடன் நாசாவும் இணைந்து வழி செய்து வருகிறார்கள். எத்தனை அனுபவமிக்க விண்வெளி வீரர்கள் சென்றாலும் ஒவ்வொரு முறையும் புதிதாகவே அந்தப் பயணம் அமைகிறது என்பதற்கு இந்த விண்வெளிப் பயணம் ஓர் எடுத்துக்காட்டு.
பூமியில் நடக்கலாம். அங்கு சென்றால் மிதக்க வேண்டும். உடல் எடை முதல், உள்ளிருக்கும் ஒவ்வொரு உறுப்பும் கை கொடுக்க வேண்டும். விண்கலன்களின் இயந்திரங்களும் சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே பயணம் சாத்தியம்.
Add Comment