சிரியா தொடங்கி இலங்கை வரை எவ்வளவோ நாடுகளில் என்னென்னவோ சிக்கல்கள், போராட்டங்கள், யுத்தங்கள் நடந்துகொண்டேதான் இருக்கின்றன. எந்த வகையில் உக்ரைன் மீதான ரஷ்யப் படையெடுப்பு அனைத்தையும்விடப் பெரும் பிரச்னை ஆகிறது?
ரஷ்ய-உக்ரைன் போர் ஆரம்பித்தது முதல் பிரிட்டன் மற்றும் ஐரோப்பாவிலிருந்து வெளியாகும் அனைத்துப் பத்திரிகைகள் மற்றும் காட்சி ஊடகங்களில் முக்கியச் செய்தி இதுதான். வெறும் பரபரப்பல்ல காரணம். அது ஓர் உள்ளார்ந்த பதைப்பின் வெளிப்பாடு.
ஐரோப்பிய நாடுகள், தங்களை நெருங்கியிருக்கும் மிகப்பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தலாகவே இதனைக் கருதுகின்றன. எனவே மறைமுகமாக ரஷ்யாவிற்குக் கடும் நெருக்கடிகளைத் தந்து கொண்டிருக்கின்றன. இதில் ரஷ்யாவிற்கு எதிரான பொருளாதாரத் தடைகள், சர்வதேச பணப் பரிவர்த்தனை முறைமையிலிருந்து ரஷ்யாவை நீக்குவது, உக்ரைனிற்குத் தற்காப்பு மற்றும் போர் ஆயுதங்கள் வழங்குவது எனப் பல அடக்கம்.
இந்தப் போரில் உக்ரைனுக்கு ரஷ்யா மட்டுமே எதிரி. ரஷ்யாவிற்கோ உக்ரைனையும் தாண்டி பல ஐரோப்பிய நாடுகளும் எதிரிகள். பிறகு ஏன் மற்ற நாடுகள் ஒன்றிணைந்து ரஷ்யாவை அடக்கி வைக்க முடியவில்லை?
காரணம், அனைத்து ஐரோப்பிய நாடுகளின் பகுதியளவு குடுமி ரஷ்யாவின் கரங்களில் இருக்கிறது. எண்ணெய்.
இது மிகையே இல்லை. ஐரோப்பிய நாடுகள் தங்கள் எரிபொருள் தேவைக்காகப் பெருமளவு ரஷ்யாவைச் சார்ந்து இருப்பது இப்பிரச்னையின் ஆணி வேர். தவிர, ரஷ்யாவின் அணு ஆயுத பலம் அவ்வளவு எளிதாகப் புறக்கணிக்கத்தக்கதல்ல. பெரும்பாலான நேரங்களில் ஒருவர் மற்றொருவரைத் தாக்குவது தன் பலத்தினால் அல்ல. எதிரியின் பலவீனத்தினால்தான். இந்தக் கணக்கும் இங்கே சரியாகப் பொருந்தி உட்காரும்.
ஐரோப்பிய-ரஷ்ய உறவைப் பொறுத்த வரையில் ரஷ்யாவின் எரிபொருள் வளம் (எண்ணெய், எரிவாயு, திரவ இயற்கை எரிவாயு மற்றும் மின்சாரம்) மிக முக்கியமானது…
சிறப்பான கட்டுரை