147. இருளும் ஒளியும்
இருளுக்கோர் ஒளி உண்டு என்று அவன் தனக்குள் கூறிக்கொண்டான். அது இருளின் மேற்சதை பூசிய மினுமினுப்பினின்று பிறக்கிறது. மேற்சதை மினுமினுப்பை இருள் தன்னகத்தே கொண்ட கருமையினின்று பிரதிபலிக்கிறது. இருளின் கருமையை இயற்கை தீட்டியிருக்கிறது. மாயை இருமையினாலானதென்று கருவூரார் சொன்னதை அவன் நினைவுகூர்ந்தான்.
இயற்கை மாயைக்கு அப்பாற்பட்டது. அல்லது மாயை என்ற ஒன்றன் நிழலும் படியாதது. எனக்கு மாயை ஒரு பொருட்டல்ல. நம்பாத ஒன்றைக் கருத விரும்பாதவன் நான். ஆனால் நான் இயற்கையை நம்புகிறேன். அதுவே அனைத்தினும் பெரிதென நினைக்கிறேன். பெரிதென நான் கருதும் ஒன்று தனது தனித்த அடையாளமாகத் தேர்ந்தெடுத்த நிறம் கருமையே என்றால் நான் அதனை வணங்குகிறேன்.
இருள் கருமை பூசியிருக்கிறது. கருவறை கருமை பூசியிருக்கிறது. பெருங்கடலின் அடியாழங்கள் கருமை பூசியிருக்கின்றன. மாமலைகளின் இரகசியங்களைச் சுமந்து காலமற்ற காலந்தொட்டு மறைந்திருக்கும் வனங்கள் கருமை பூசியிருக்கின்றன. பெருந்தருக்களைத் தன்னகத்தே ஏந்தி மறைந்து அடைகாக்கும் வித்துகள் நிலத்தின் அடியில் இருளுக்குள்தான் தவமிருக்கின்றன. அவையும் கருமையின் பூரணத்துக்குள் தம்மைப் புதைத்துக்கொண்டிருக்கின்றன.











Add Comment