148. முழுக்கு
அல்லும் பகலும் தத்தமது விளிம்புகளிலிருந்து விலகிச் சென்றன. காலம் முதலில் உறைந்தது. பிறகு மெல்ல உருகி அச்சுரங்கத் தடத்தின் சரிவுகளில் ஓடி, மாயப் படித்துறையின் கற்களுக்கிடையே பரவி நதியில் இறங்கி மறைந்துகொண்டது. வெம்மையும் தண்மையும் தம்மை மறைத்துக்கொண்டன. அவ்வெளி நிறைத்த கருமை, சாம்பர் பூசிக்கொண்டது. நிலத்தடி மண்ணும் அதன் ஈரமும் இறுக்கமும் ஒட்டி இறுகிய பாறைகளின் இடுக்குகளுக்கிடையே வாழும் புழுவினங்களின் கழிவும் கலந்து நிறைத்த நெடி தன் வீரியம் இழந்தது. உள்ளொளியின் துணையுடன் தன் தாயின் கருவறைக் கதவங்களைக் கண்டறிந்து, சார்வாகன் அதனுள்ளே நீந்திச் சென்றதும் கதவங்கள் தாமே மூடிக்கொண்டன.
என்னால் அவ்வெண்ணத்தைத் தவிர்க்கவே முடியவில்லை. முதல் முதலில் அவனது சிந்தைக்குள் ஒரு புழுவின் அளவே தன்னைச் சுருக்கிக்கொண்டு கருவூர்ச் சித்தர் வந்தமர்ந்த காட்சியை நினைவுகூர்ந்தேன். அக்கருவறைக்குள் சார்வாகன் ஆகத் துல்லியமாக அவ்வண்ணமே இருந்தான். சிரம் கவிழ்ந்து, கரங்களை நெஞ்சின் மீது நிறுத்திக் குவித்துக் கால்களை வளைத்து ஒடுக்கிக்கொண்டு, பன்னெடுங்காலத்துக்குப் பிறகு மீண்டும் அதன் உறுப்பாகிப் போனான். நிலம் நோக்கி அவனைச் செலுத்திய பின்பு தன்னைச் சுருக்கிக்கொண்டு அங்கேயே மிதந்து கிடந்த கொப்பூழ்ச் சரடு இப்போது அவனை மெல்லச் சுற்றி இறுக்கித் தனதாக்கிக்கொண்டதைக் கண்டேன்.











Add Comment