155. கண்ணீர் இல்லாதவன்
பெரும் புயலொன்றில் சிக்கிச் சின்னாபின்னமாகிப் பெயர்த்தெறியப்பட்ட செடியின் இலையொன்று நீரின் போக்கில் எங்கெங்கோ மிதந்து திரிந்து யாருமறியா மூலையில் கரையொதுங்கிப் பிறகு காய்ந்து மெல்ல மெல்ல உரு சிறுத்துச் சருகாகி அசைவது போலிருந்தது பாரதாய தத்தனின் மிரட்சி. நானறிவேன். சார்வாகன் விவரித்த புதையுண்ட பெருஞ்சரிதத்தை அவன் உள்வாங்கிச் செரிக்க நிச்சயமாகக் காலமெடுக்கும். இதனைப் புரிந்துகொண்ட சார்வாகன், அதன் பொருட்டே மேலும் சில விவரங்களை அப்போது அவனிடம் தெரிவிக்காமல் நிறுத்தி வைத்தான். அவனது சிந்தைக்குள் நான் படித்தறிந்த அப்பகுதி, அதுவரை அவன் விரித்துச் சொன்ன பெருங்கதையினும் அதிர்ச்சி தரக்கூடியது.
என்றேனும் ஒருநாள் தனது விருப்பம் நிறைவேறும், இலக்கு அடையக்கூடிய நெருக்கத்துக்கு வந்து சேரும்; அப்போது ஒரு பெண்ணைத் தேடி மணமுடித்து, அவள் வழியே தனது சந்ததியைப் பெருக்கிப் பல தலைமுறைகளை உருவாக்க வேண்டுமென்று அவன் எண்ணம் கொண்டிருந்தான். அப்படி உருவாகும் ஏழாம் தலைமுறையில் பிறப்பவனுக்குள் தனது சக்திகளைச் செலுத்தித் தன் பிரதி பிம்பமாக இயங்கச் செய்து, தன் இருப்பிடத்திலிருந்தே அவனை இயக்கித் தான் அடைய நினைத்த அனைத்தையும் அடைய வேண்டுமெனத் திட்டமிட்டிருந்தான்.
இது மயூரமுகி அவனுக்குச் சொன்ன திட்டம்தான்.











Add Comment