159. அதி தேவதை
வேட்டனின் சிந்தைக்குள்தான் இருந்தேன். இழுத்துக் கட்டப்பட்ட கம்பியின் மீது ஒரு பட்சி பறந்து வந்து அமருங்கால் உண்டாகும் மிக மெல்லிய அதிர்வினை வீசும் காற்று நீட்டித்துக்கொண்டே செல்வதை நிகர்த்திருந்தது அவ்வெளியின் தன்மை. அவனது பிராயத்தைக் கணக்கில் கொள்ளும்பட்சத்தில் அந்நீடித்த சலனம் மிகுந்த அபாயகரமானதென்பதில் ஐயமில்லை. நொடிக்கு நூற்றிலொரு பங்கும் அவனால் அமைதியாக இருக்க இயலவில்லை. அவன் தவித்தான். அவன் தடுமாறினான். அவன் பதற்றம் கொண்டான். அவன் சீற்றமடைந்தான். அவன் தனக்குள் அழுதான். உடனே ஆவேசம் கொண்டான். அது தவறென உணர்ந்து அமைதி கொள்ளப் பார்த்து, ஒவ்வொரு முறையும் தோற்றான். தன்னைத் தேற்றிக்கொள்ள வழி தெரியாமல் அலைமோதிக்கொண்டிருந்ததை என்னால் மிகத் தெளிவாக அறிந்துணர முடிந்தது.
வேட்டனின் சிந்தையில் இருந்தவண்ணம் நான் படித்தறிந்துகொண்டவற்றில் மிக முக்கியமானதொன்று உண்டு. மண்ணாளும் இச்சையல்ல அவனது இறுதி இலக்கு. கருவூரார் பாதம் பதித்து நடமாடும் இடமனைத்தும் தனதாக இருக்க வேண்டுமென அவன் பன்னெடுங்காலம் முன்பு எண்ணியிருக்கிறான். வெறும் எண்ணமாகத் தோன்றியதுதான். மெல்ல மெல்ல அதையே எப்போதும் கருதியிருப்பது அவனது வழக்கமாகிப் போனதால், ஒரு கட்டத்தில் அதுவே தனது இலட்சியமென அவன் வகுத்துக்கொண்டான். முந்நூறாண்டு காலமாக அவன் மேற்கொண்ட தவமெல்லாம் அந்த இலக்கின்மீது கட்டப்பட்டதாகவே இருந்தது.
எனக்கு அது மிகவும் வினோதமான உணர்வைத் தந்தது. ஒவ்வொரு மனிதனும் தனது இலக்கினால் சமைக்கப்படுகிறான். அவனது குணமும் நடத்தையும் ஆகக் கூடியபட்சம் அவனது இலக்கினால் வடிவமைக்கப்படுபவையாகவே இருக்கின்றன. பெரிய இலக்குகள் இல்லாதவர்களும் மீச்சிறு, தாற்காலிக இலக்குகளைக் கொண்டு வாழ்ந்து தீர்த்துவிட்டுப் போகிறார்கள். அம்மீச்சிறு தாற்காலிக இலக்குகளே அத்தகு எளிய வாழ்க்கைகளையும் வடிவமைக்கின்றன.











Add Comment