160. சூள்
அறவியைப் போன்ற இன்னோர் அழகி மண்ணுலகில் பிறந்திருக்கவே முடியாதெனத் திருக்குன்றக்குடியெங்கும்* பேசுவார்கள். தளிச்சேரிப் பெண்ணாகிய* அறவி, திருப்பணிகளில் தன்னை ஒப்படைத்துக்கொண்டு, கோயிலே கதியெனக் கிடந்த காலத்தில் குவாவன் மாறனின்* தாயாதிகளுள் ஒருவனாகிய பழியிலி பண்டாரன் என்பான் அவளைக் கண்டு மையல் கொண்டான். ஊரறியா அவ்வுறவின் விளைவாக அறவி கருவுற்ற நேரத்தில் பழியிலி பண்டாரன் அவளையும் அச்சேதி தெரிந்த அவளினத்தாரையும் நாட்டை விட்டு வெளியேறச் சொல்லிக் கட்டாயம் செய்தான். நாடு நீங்கிப் போவது பொருட்டில்லையாயினும் நாதனை நீங்க முடியாதெனச் சொல்லி அப்பெண்டிர் கோயிலுக்குள் தஞ்சம் புகுந்தனர். குவாவனுக்குச் சேதி தெரிந்தால் தன்னைக் கொன்றுவிடுவான் என்று அஞ்சிய பண்டாரன், ஒரு நாள் தளிக் குலத்திருந்த ஏழு பெண்டிரையும் கொன்றுவிட முடிவு செய்து தனது ஆள்களை ஏவினான். எழுவரில் அறுவர் திடீர் திடீரெனக் காணாது போனதையும் பிறகு சடலமாக மீளக் கிடைத்ததையும் கண்ட அறவி, அச்சம் மிகக் கொண்டு திருக்குன்றத்தின் தெற்கு முகட்டில் இருந்த இரகசியக் குகையினுள் பதுங்கி வாழ்ந்தாள். தன்னைத்தானே கவனித்துக்கொண்டு, தனித்துத் தவத்திலிருந்தவளின் சிந்தையில் இருந்ததெல்லாம் ஒன்றுதான். எப்படியாகினும் தன் சிசுவைப் பெற்று இறக்கி வாழச் செய்துவிட வேண்டும்.
உரிய காலம் வந்தபோது அறவிக்கு வலி கண்டது. உதவிக்கும் யாருமற்ற இருட்குகையில் அவள் தன் சிசுவைத் தானே பிரசவித்துக் கொடியறுத்துக் கையிலேந்தியபடி குகையினின்று வெளிப்பட்டபோது பழியிலி பண்டாரனின் சேவகர்கள் அவளைக் கண்டுகொண்டார்கள். தப்பித்து ஓடிய அறவியை அவர்கள் மலையடிவார வனத்தில் கட்டி வைத்து உயிருடன் எரிக்க முனைந்தார்கள்.
இச்சம்பவம் நடந்துகொண்டிருந்தபோது அவ்வனத்தினுள் தனது தவத்தை முடித்து வந்துகொண்டிருந்த கருவூர்ச் சித்தர், கண்ணெதிரே நிகழ்வதைக் கண்டு அதிர்ச்சியடைந்து உரத்த குரலில் கொலையாளிகளை எச்சரித்தபடி ஓடி வந்தார். அக்கணமே அவர்கள் சிசுவைப் போட்டுவிட்டு ஓடித் தலைமறைவானார்கள்.











Add Comment