181. தனியன்
அடர்ந்த இருளும் தெளிந்த நிலவொளியும் வெளியை நிறைத்திருந்தன. தஞ்சப்புரியின் எல்லையைச் சூழ்ந்திருந்த நீண்ட மதிற்சுவருக்கு அப்பால் நான்கு பாக அகழியின் ஓரமெங்கும் சரள மரங்கள் ஓங்கி உயர்ந்து கவிந்திருந்தன. அகழியில் நீரோட்டம் இருந்தது. ஒன்றுடனொன்று முட்டி உரசிக்கொண்டு முதலைகள் நீந்திச் செல்வதைச் சார்வாகன் உற்று நோக்கினான். அது வடவாற்றிலிருந்து மதகு திறந்து தருவிக்கப்படுகிற நீர் என்றும் அம்முதலைகள் அங்கிருந்து வருவனதாம் என்றும் உதுமானி நாயனார் சொன்னார்.*
தெரியுமா? இவ்வகழியில் நீ பார்க்கும் நீரோட்டம் நகரை முழுவதுமாகச் சுற்றிக்கொண்டு மீண்டும் வடவாற்றுக்கே சென்றுவிடும். எங்கும் தேங்காதவாறு திட்டமிட்டிருக்கிறார்கள்.
சார்வாகன் தலையசைத்துக் கேட்டுக்கொண்டான். அவனது சிந்தை முற்றிலுமாக அப்போது குடமுழுக்கு நாளின்மீதே நிலைபெற்றிருந்தது. நாயனார் அழைத்ததால் அவன் நகருக்கு வெளியே வந்தான். அவர் சொன்னதால் அவரோடு சுற்றிக்கொண்டிருந்தான். கடமையே போல அவர் சொல்வதைக் கேட்டுக்கொண்டும் கேட்பதற்கு விடையிறுத்துக்கொண்டும் இருந்தானே அன்றி, நொடிப் பொழுதும் சிந்தையை அவற்றின்பால் குவித்தானில்லை.











Add Comment