182. உயிர் கொண்டு நிறுவுதல்
நீண்ட, மிக நீண்ட காலமாக இயற்கை உள்பட எதனாலும் யாராலும் பொருட்படுத்தப்படாத ஒரு தூறினைப் போலத் தான் அமர்ந்திருந்த மரத்தடியில் அசையாது கிடந்தான் வேட்டன். எண்ணிப் பார்க்கவே மிகவும் வினோதமாக இருந்தது. புவியில் வேட்டன் என்றொரு மனிதன் அவ்விடத்தில் மூச்சு விட்டுக்கொண்டிருக்கிறான் என்பதை நானறிவேன். அவன் இருப்பதை அறிந்த சார்வாகனும் உதுமானி நாயனாரும் கருவூராரும் அவர்களைச் சார்ந்தோரும்கூட அவன் இருப்பதை நம்புவோரே அன்றி உணர்ந்தாரோ கண்டாரோ அல்லர். அவன் சராசரி மனிதனினும் சிறிதே உயரமாக இருப்பான். நெடுங்காலமாகப் பெரும்பாலும் இடத்தை விட்டு அசையாமல் அமர்ந்தே இருந்ததனால் தண்டுவடம் சுருங்கிக் கூனிட்டுப் போயிருந்தான். அவனது தூல உடலத்தின் பருமன் அதிகம்தான். அதுவும் இயக்கமற்று இருந்ததனால் உண்டானதாகத்தான் இருக்க வேண்டும். வெப்பமும் குளிரும் தாக்கும்போது தற்காத்துக்கொள்ள இயற்கையாக உடலமெங்கும் முளைத்து அடர்ந்து நிறைந்துவிட்டிருந்த உரோமம். தவிர, வேறு தோற்றப் பிசிறுகள் அவனிடத்தில் இல்லை. அவன் உண்பதில்லை. உறங்குவதில்லை. ஒரு தடாகத்தின் கரையிலேயேதான் முந்நூறாண்டுகளாக வசித்து வந்தானெனினும் மிகச் சில தருணங்களில் மட்டுமே அதில் இறங்கி நீராடியிருக்கிறான். அதனாலேயே யாரும் நெருங்கிப் பேச இயலாத அளவுக்கு அவனைச் சுற்றி எப்போதும் ஒரு சகிக்கவியலாத நெடி சூழ்ந்திருக்கும். யாரும் வரவியலாததொரு வசிப்பிடம், எப்போதும் பசிக்காத நிலை, எப்போதும் உறக்கமற்ற நிலை, சார்வாகனைக் கருதிச் செலுத்தி வந்த செயலை அன்றி இன்னொன்றைத் தொட்டும் பாராத சிந்தை, இதனாலெல்லாம் நோயுற்றுக் களைத்துவிடாதிருக்கும் நிலை போன்றவற்றையெல்லாம் அவன் நிருதியிடம் வரமாகப் பெற்றிருந்தான்.
இரேவதாசன் கிரமவித்தனிடம் அவன் அதர்வம் பயின்ற காலத்தில் அவனால் மந்திரங்களை மனத்தில் ஏற்றி இருத்த முடிந்ததே அல்லாமல் அவற்றை மீண்டும் மீண்டும் உச்சரித்து உருவேற்றி வைக்க இயலவில்லை.
மந்திரங்களை நீ என்னவென்று எண்ணியிருக்கிறாய்? வெறும் சொற்களில் ஒன்றுமில்லை வேட்டனே. அவற்றை மீண்டும் மீண்டும் உச்சரித்து உருவேற்றுவதில்தான் சூக்குமம் இருக்கிறது. உன் கரத்தில் ஒரு வாள் இருக்குமானால் அதனைக் கொண்டு என்ன செய்ய இயலுமோ, அதை உன் மனத்தில் கூர் தீட்டி உருவேற்றி வைத்திருக்கும் ஒரு சொல்லினைக் கொண்டும் செய்ய இயலும். ஒவ்வொரு மந்திரமும் அத்தகு சொற்களைக் கொண்டு கட்டப்பட்டதுதான். வாளினைக் கூர் தீட்டக் கல்லென்றால், சொல்லினைக் கூர் தீட்ட உன் சிந்தையைத்தான் நீ பயன்படுத்தியாகவேண்டும். வெறுமனே மனனம் செய்து சேர்த்து வைக்கும் மந்திரங்களால் யாதொரு பயனும் இல்லை,
என்று இரேவதாசன் ஒருமுறை வேட்டனிடம் சொல்லியிருக்கிறான் என்பதை அவனது சிந்தையின் அடியாழத்தில் இருந்த அடுக்கொன்றில் படித்தறிந்தேன்.











Add Comment