183. அவிட்டம்
அற்புதி கணித்துக் கூறியதா, கண்டறிந்து கூறியதா என்று நானறியேன். குட முழுக்குக்கு முந்தைய கிழமையின் நடுச்சாமத்துக்கு முன்பாகவே கருவூரார் பிரணப் பிரதிட்டை செய்துவிடுவார் என்று கேட்டதற்குப் பிறகு என்னால் வேட்டனின் சிந்தையில் நிலைகொண்டிருக்க இயலவில்லை. அந்நொடியே நான் உதுமானி நாயனாரைக் கருதி அவரது சிந்தைக்குள் பரவி நிறைந்தேன்.
அது நான் எதிர்பாராதது. நான் நாயனாரின் சிந்தையில் பரவியபோது, விடிந்தால் குட முழுக்கைக் காணவிருந்த அப்பேராலயத்தினுள் அவர் நுழைந்துகொண்டிருந்தார். அக்கற்றளியை நான் கண்டது முதல் முறை என்பதால் அவரது சிந்தையை அகழ்வதற்கு முன்பு அவரது விழிகளின் ஊடாகக் கோயிலை உற்று நோக்கினேன். பெரிய, மிகப்பெரிய கட்டுமானம்தான். நிலத்தைத் தோண்டி ஒவ்வொரு கல்லாக நட்டுக் கட்டியெழுப்பியிருப்பார்கள் என்று தோன்றவேயில்லை. யாருமறியா வேறொரு புவியில் வனைந்து எடுத்து வந்து யாரோ இங்கு வைத்துவிட்டுச் சென்றாற் போலவே தோற்றமளித்தது. மூலைக்கு மூலை இரட்டைத் தீப்பந்தங்கள் சொருகி, இராப் பொழுதைப் பொன்னொளிப் பொழுதாக்கியிருந்தார்கள். முன் மண்டபத்தில் குட முழுக்குச் சடங்குகளுக்கான பொருள்கள் யாவும் வரிசையில் வைக்கப்பட்டிருந்தன. பொற்கும்பங்களும் ஆபரணங்களும் நெற்கதிர்களும் பட்டு வத்திரங்களும் நெய்க் குடங்களும் கோலமிடப்பட்ட வேள்விக் குண்டங்களின் அருகே மலையெனக் குவிக்கப்பட்டிருந்ததைக் கண்டேன்.
ஆனால் வியப்பூட்டும் விதமாகக் கோயிலுக்குள் மனித நடமாட்டமே இல்லாதிருந்தது. திருச்சுற்று மாளிகையின் மீது எட்டு பாகத் தொலைவுக்கு ஒரு வீரனென்ற கணக்கில் காவலுக்கு இருந்தவர்களை அன்றி யாருமே தென்படவில்லை. உதுமானி நாயனார் இரு பெரும் வாயில்களைக் கடந்து ஆங்கே நிறுவப்பட்டிருந்த கல்லினாலான பெரியதொரு நந்தி உருவினை நோக்கி நடந்துகொண்டிருந்தபோது,
ஐயனே வாருங்கள்
என்று அழைத்தபடி, சோனகன் சாவூர் பரஞ்சோதியான அபுது தடதடவெனப் படியிறங்கி ஓடி வந்து எதிரே வணங்கி நின்றான்.











Add Comment