185. அரவமும் அறமும்
நான் வேட்டனின் சிந்தையில்தான் இருந்தேன். அவனது ஆவேசமும் பதற்றமும் துக்கமும் அச்சமும் நடுக்கமும் விரக்தி உணர்வும் சற்றுத் தணியட்டும் என்று காத்திருந்தேன். அவன் உருவேற்றி வைத்திருந்த ஒற்றை மந்திரம் அந்த அற்புதியெனும் மாயச் சர்ப்பத்தை அவனுக்குத் தருவித்துத் தந்திருந்தது என்றாலும் அதன் வல்லமை சார்ந்த நம்பிக்கையின்மை அவன் மனத்தில் மெல்ல மெல்ல உருவாகிச் சாம்பர்ப் படலமென அடர்ந்து படர்ந்துகொண்டிருந்தது. ஒரு முறை இருமுறையல்ல; பன்னிரு முறை அற்புதி வேறு வேறு திக்குகளிலிருந்து பறந்து வந்து கற்றளியை நெருங்கப் பார்த்தும் அதனால் முடியவில்லை. மிகத் துல்லியமாக நிலத்தில் தடுப்புக் கட்டைகள் போடப்பட்டிருந்த இடத்துக்கு மேலே பறந்து வரும்போது அது புலப்படாத பாறையின்மீது மோதிக்கொண்டாற்போலச் சுருண்டு விழுந்ததில் அவன் நொறுங்கிவிட்டிருந்தான். ஆனால் பன்னிரு முறையும் அது, தன் மீது அமர்ந்திருக்கும் வேட்டன் தடுமாறிக் கீழே விழுந்துவிடாத வண்ணம் தன் வால் பகுதியை அவன்மீது படரச் செய்து ஒரு கயிறு போலாக்கிச் சுருட்டி இறுக்கிக் காத்ததையும் கவனித்தான்.
நான் விழலாம் வேட்டனே. எனக்கு வலியென்ற ஒன்றில்லை. ஆனால் என் மீதிருந்து நீ தவறி விழுந்தால் அந்நொடியே உன் தோற்றம் புலப்பட்டுவிடும். தஞ்சப்புரிக்குள் ஓர் எண்கு நுழைந்துவிட்டதென எவனாவது கண்டு அலறினால் சிக்கலாகிவிடும்,
என்று அச்சர்ப்பம் சொன்னது. ஆனால் வேட்டனுக்குத் தான் இருப்பதோ, புலப்படாதிருப்பதோ, அதன் இன்றியமையாமையோ பொருட்டாகவே இல்லை. இந்த இராப் பொழுதைத் தவறவிட்டால் என்றுமே இது நிகழாமல் போய்விடக் கூடுமென்ற அச்சம் ஒன்றே அவன் சிந்தையை நிறைத்திருந்தது. அதுவே அவனது சொற்களாகவும் வெளிப்பட்டுக்கொண்டிருந்தது.
அற்புதிக்கு அவனது தவிப்பு புரிந்தது. ஆனால் அமைதியாகச் சிந்தித்தாலொழிய இதற்கொரு மாற்று வழி கண்டறிய முடியாது என்று நினைத்தது. அதைப் பல்வேறு விதமாக அவனிடம் சொல்லவும் செய்தது.











Add Comment