தமிழ்நாடு அரசின் இலவசப் பேருந்துப் பயணத்திட்டம், பெண்களின் மாதச் செலவு கணக்கிலிருந்து பேருந்துப் போக்குவரத்து கட்டணக் கவலையைப் போக்கியுள்ளது. முன்பெல்லாம் பேருந்தில் ஏறுவதற்கு முன்பே பயணச் செலவைக் கணக்கிட வேண்டியிருந்த பெண்களுக்கு அந்தக் கவலை தற்போது வெகுவாகக் குறைந்துள்ளது.
மருத்துவமனைக்குச் செல்ல, வேலை தேட, உறவினர்களைச் சந்திக்க, வீட்டுப் பொருள்களுக்காகக் கடைத்தெருவுக்குப் போக எனப் பல தேவைகளுக்காகப் பெண்கள் தினசரிப் பயணம் செய்கின்றனர்.
முந்தைய திமுக அரசு, 2021 ஆண்டு மே மாதத்தில் ‘விடியல் பயணம்’ என்னும் திட்டத்தை அறிமுகம் செய்தது. குறிப்பிட்ட சாதாரணக் கட்டண அரசுப் பேருந்துகளில் பெண்கள் கட்டணமின்றிப் பயணம் செய்யும் வகையில் அது செயல்படுத்தப்பட்டது.
தமிழக அரசின் மாநிலத் திட்டக்குழு ஆய்வின்படி, இத்திட்டத்தினால் பெண்கள் மாதந்தோறும் சராசரியாக 888 ரூபாய் பயணச் செலவைச் சேமித்துள்ளனர். இன்னொரு ஆய்வில், தமிழகத்தின் ஆறு நகரங்களில் பெண்களிடம் இலவசப் பேருந்துப் பயணத்தை பற்றிக் கருத்து கேட்கப்பட்டது. அதில் பங்கேற்ற பெரும்பாலானோர், இத்திட்டத்தால் தங்களுடைய பயணப் பழக்கங்கள் மாறியுள்ளதாகத் தெரிவித்தனர். சேமிக்கப்பட்ட பணம் குடும்பத் தேவைகள், உணவு, கல்வி, போன்றவற்றுக்குப் பயன்படுவதாகப் பதிவுசெய்தனர்.















Add Comment