அந்தக் கைக்குழந்தை பசியில் கதறிக்கொண்டிருந்தது. அங்கு உண்ண ஏதுமில்லை. தாய்ப்பால் கூட வற்றியிருந்தது. அலறும் சிசுவைப் பீதியுடன் பார்த்துக்கொண்டிருந்தனர் அங்கு பதுங்கியிருந்த மற்றவர்கள். பயத்தில் அவர்களுடைய தேகங்கள் பதறின. மனிதத்தை உயிர் பயம் கொன்று தின்றது. ‘உன் பிள்ளை நம் எல்லாரையும் காட்டிக்கொடுத்துவிடப் போகிறது, நீங்கள் சாவதோடு எங்களையும் கொன்றுவிடாதீர்கள்’ என்று மொத்தக் கோபத்தையும் தாய் மீது கொட்டினார்கள்.
அவளுக்கு மூன்று பிள்ளைகள். பாகிஸ்தானிலிருந்து காஷ்மீருக்குள் புகுந்த காட்டுமிராண்டிகளின் வெறியாட்டத்துக்கு அஞ்சி ஓடியபோது இரண்டு பிள்ளைகள் தொலைந்துபோனார்கள். அவர்கள் உயிரோடிருக்கும் வாய்ப்பு மிகக் குறைவு. அவள் கைக்குழந்தையுடன் இந்தக் காட்டுப்பகுதியில் தஞ்சம் புகுந்திருந்தாள்.
குழந்தையின் அழுகையை நிறுத்த அவளுக்கு வழி தெரியவில்லை. கையறு நிலை. அங்கிருந்து ஓடுவதிலும் பயனில்லை. அவர்கள் எளிதாகப் பிடித்துவிடுவார்கள். அப்போதுகூட இருவருக்கும் மரணம் உறுதிதான். ஆனால், அதற்கு முன் அவள் வன்புணர்ச்சிக்கு ஆளாகலாம்.















Add Comment