29. நாகாரிக் காப்பு
உயிர் அடங்கிக்கொண்டிருந்த ஒவ்வொரு நொடியையும் கூர்ந்து அளைந்தகொண்டிருந்தேன். உடலுக்குள் அவன் அனுபவித்த வேதனை எத்தகையது என்பது எனக்குத் தெரியாது. ஆனால் தூக்கி வீசப்பட்ட ஒரு சர்ப்பத்தினைப் போலவே அவன் ஆதுர சாலையின் வாயிலருகே துடித்து நெளிந்து துவண்டு அடங்கியதைக் கண்டேன். நஞ்சு உதிரமெங்கும் கலந்துவிட்டிருந்தது. கண்டத்தில் நேராகச் செலுத்தப்பட்டது, உடனடியாக நாடிகளைத் தளரச் செய்ததை உணர்ந்தேன். அவனது சிந்திக்கும் வேகம் சிறுத்துக்கொண்டே சென்றது. எத்தனை மகத்தான, பொருளற்ற வாழ்க்கை என்று நினைத்தான். தன் மரணத்தைக் குடந்தை மக்கள் எப்படியெல்லாம் கொண்டாடுவார்கள் என்று எண்ணிப் பார்க்க விரும்பினான். ஆனால் சொற்களும் காட்சிகளும் கரைந்து, பிசுக்குப் படிந்த மண்டல ஆடியில் முகம் பார்ப்பது போன்ற தோற்றத்தையே அவனால் காண முடிந்தது. ஒன்றை அறிந்தேன். அவன் இறக்க விரும்பவில்லை. யாராவது இரக்கம் கொண்டு தனக்குச் சிகிச்சையளித்துவிட மாட்டார்களா என்று மிகவும் ஏங்கினான். குரலெழுப்பி அழைக்கவும் வலுவிழந்து போய்த்தான் விழுந்தான்.
சார்வாகனின் சிந்தைக்குள் இனியொரு முறை செல்லத்தான் வேண்டுமா என்று நினைத்தேன். வேண்டாம் என்ற முடிவின்பேரில்தான் உதுமானி நாயனாரைச் சென்றடைந்தேன். ஆனால் எதனைக் கருதி மீண்டும் அவனுக்குள் நுழைந்தேன் என்று தெரியவில்லை. எனக்குக் களி நோக்கமில்லை. ஆனால் ஒரு மாந்திரீகன் தனது அகால மரணத்தை எதனைக் கொண்டு தடுக்கப் பார்க்கிறான், எப்படித் தவிர்க்க முனைகிறான் என்று அறிய இது ஒரு தருணமல்லவா?










Add Comment