சுமார் இரண்டு லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு புதிய மனித இனம் பூமியில் வாழ்ந்ததைக் கண்டறிந்துள்ளனர் விஞ்ஞானிகள். இந்த இனத்துக்கு ‘ஹோமோ ஜூலுவென்சிஸ்’ என்று பெயர் சூட்டியுள்ளனர். இந்த இனத்தின் கண்டுபிடிப்பு, இதுவரை நமக்குத் தெரிந்த பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டை மறுவரையறை செய்துள்ளது.
மனிதனின் பரிணாம வளர்ச்சி என்றதும் நமக்கு உடனே நினைவுக்கு வருவது டார்வின் கோட்பாடு. கூடவே, குரங்கிலிருந்து படிப்படியாக மனிதன் தோன்றியதாகக் காட்டும் படம் ஒன்றும் நமக்கு ஞாபகம் வரும். கால்களோடு கைகளையும் பயன்படுத்தி நடக்கும் குரங்கு, அந்தப் படத்தில் முதல் நிலையில் இடம் பெற்றிருக்கும். டிரையோபிதிகஸ் (Dryopithecus) என்பார்கள். ‘Pithecus’ என்ற பின்னொட்டு, மனிதக் குரங்கு என்ற பொருளைத் தரும் கிரேக்கச் சொல். இந்த இனம் 1856ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. குறைந்தது நூற்றுப் பத்து லட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த இனமாக இது கருதப்படுகிறது.
ஒருகட்டத்தில் இந்தக் குரங்கு கால்களை மட்டும் பயன்படுத்தி, கூன் விழுந்தாற்போல குனிந்து நடக்கத் தொடங்கியது. மனிதப் பரிணாம வளர்ச்சியின் இந்தப் படிநிலையை ரமபிதிகஸ் என்கிறார்கள். குறைந்தது எண்பது லட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் இவ்வினம் இன்றைய இந்தியா, பாகிஸ்தான் பகுதிகளில் வாழ்ந்ததாகக் கூறுகிறார்கள்.















Add Comment