64. ஒரு முகம், மறு முகம்
வாழ்நாளில் அதற்குமுன் கண்டிராத பேரற்புதக் காட்சியொன்றை வேட்டன் அன்று கண்டான். அவனுக்கு அது கனவு போலிருந்தது. தன் தலையில் தானே தட்டிப் பார்த்துக்கொண்டு, விழிகளைக் கசக்கிப் பார்த்துக்கொண்ட பின்பு அது கனவில்லை என்று நிச்சயம் செய்துகொண்டான். குன்றத்தின் அடிவாரத்தில் இருந்த லிங்கத்தின் மீது நொடிப் பொழுது அமர்ந்து எழுந்து பறந்து மறைந்த மயூரம் அதுவாகத்தான் இருக்க வேண்டும். ஆனால் அது ஒரு பெண்ணாகவும் தோற்றமளித்தது. ஒரு பெண்ணின் முகமும் மயூரத்தின் புறத்தோற்றமும் மகரத்தின் தேகம் நிகர்த்த உடலமைப்பும் கொண்டிருந்த அதன் இறக்கைகள் மிகப் பெரிதாக இருந்தன. பெண் மயிலென்றால் வாய்ப்பில்லாத தோகை அதற்கிருந்தது. இது எவ்விதமான கட்டமைப்பு என்று அவனுக்கு விளங்கவில்லை. மீண்டும் மீண்டும் கண்களைக் கசக்கிக்கொண்டு அதனை உற்றுப் பார்த்தான்.
வெளி இருண்டுதான் இருந்தது. அந்நிலப்பரப்புக்குத் தொடர்பற்ற சீதம் நிறைந்து தேகம் விரைத்துப் போகும் அளவுக்குக் குளிர்ந்தது. நிலவின் ஒளியுமற்றிருந்த இருளின் பூரணத்தில் அம்மயூரத்தின் தோற்றம் மட்டும் எப்படித் தனக்குப் புலனாகிறதென்று அவனுக்கு விளங்கவில்லை. அது பொன்னொளிர் தேகம். நிற்கிறதா, மிதக்கிறதா, பறக்கிறதா என்று தெரியாதவாறு இங்குமங்கும் அலையாடிக்கொண்டே இருந்தது. அது அசையும்போதெல்லாம் மேனியினின்று பொற்துகள்கள் உதிர்ந்தவண்ணம் இருந்தன. அது ஒரு தூசுப் படலம் போல அம்மயூரத்தைச் சுற்றி நிறைந்து மேலும் பொலிவூட்டியது. அதன் இறக்கைகள் அடித்துக்கொள்ளும்போதெல்லாம் அப்பொற்தூசுப் படலம் ஒரு புயலென எழுந்து நிறைந்து அடங்கியதையும் அவன் கண்டான்.
திகைப்பில் திக்குமுக்காடி நின்ற வேட்டனைப் பார்த்து அவள் பேசத் தொடங்கினாள்.











Add Comment