63. ஒலித்தவள்
எங்கிருக்கிறோம் என்று அவனுக்குத் தெரிந்திருக்கவில்லை. ஆனால் கருவூரை விட்டு நெடுந்தொலைவு சென்றுவிட்டிருந்தான். பல கிழமைகள் இரவு பகலறியாது நடந்துகொண்டே இருந்தவன், களைத்து விழுந்த இடத்தில் ஓர் அல்லூரத்தின்* அடியில் சிறியதொரு லிங்கம் பிரதிஷ்டையாகியிருந்ததைக் கண்டான். சுற்றிலும் பாறைகள் அடர்ந்து நிறைந்திருந்தன. குன்றம் சூழ்ந்த அச்சூழலில் ஒரு தடாகம் இருந்ததில் மிகுந்த மகிழ்ச்சியடைந்து ஓடிச் சென்று நீந்திக் குளித்தான். ஈரம் சொட்ட மீண்டு வந்து லிங்கத்தின் எதிரே விழுந்து வணங்கினான். எதையும் எண்ணாமல் நெடுநேரம் அதை உற்று நோக்கியபடியே இருந்தவனை யாரோ நெருங்கி வரும் ஓசை கலைத்தது.
தோற்றத்தில் அவர் சிவ பண்டிதரைப் போலில்லை. ஆயினும் பக்தியுடன் தடாகத்திலிருந்து நீர் எடுத்து வந்து லிங்கத்துக்குத் திருமுழுக்குச் செய்தார். கையோடு கொண்டுவந்திருந்த மலர்களையும் அல்லூரத் தளங்களையும் கொண்டு பூசித்தார். இரண்டு பசுங்கதலிகளை வைத்து நைவேத்தியம் செய்துவிட்டு அவனிடம் நீட்டினார்.
பிரசாதம் வாங்கிக்கொள்ளப்பா.
அவன் வணங்கி ஏற்று உதரம் குளிர உண்டான்.










Add Comment