25. வாங்க பேசலாம்
800 கோடிக்கும் மேல் மக்கள் இந்த உலகில் வசிக்கிறார்கள். 7000க்கும் மேற்பட்ட மொழிகள் உள்ளன. ஆனால் உலகின் மொத்த மக்கள் தொகையில் பாதி அளவு மக்கள் பேசும் மொழிகள் எத்தனை தெரியுமா? சுமார் 200 மட்டுமே. ஆயிரத்துக்கும் குறைவான மக்கள் மட்டுமே பேசும் மொழிகள் என்று தோராயமாக 6000 மொழிகள் உள்ளன. ஒவ்வொரு வருடமும் சில மொழிகள் அழிந்து வருகின்றன. இந்தோனேஷிய மொழிகள் பலவும் தங்கள் எழுத்துகளைக் கைவிட்டு ஆங்கில எழுத்தின் மூலம் தங்கள் மொழியை எழுதத் தொடங்கிவிட்டனர்.
பெரும்பாலானோருக்கு ஆங்கிலம் புரிகிறது எனில் எதற்கு உங்கள் மொழியைப் பேசியும் எழுதியும் விடாப்பிடியாக நீங்கள் வைத்திருக்க வேண்டும்? இந்தக் கேள்வி எழும்போதெல்லாம் முத்து எதிர்க்கேள்வி ஒன்றை எழுப்புவார். “உன்னைக் காதலிக்கிறேன் என உங்கள் காதலி உங்களிடம் சொல்வதும் வேறு ஒருவரிடம் சொல்லி அனுப்புவதும் ஒன்றுதானா?” என்று கேட்பார். யாரிடம் சொல்லி அனுப்பினாலும் அதன் பொருள் உங்களுக்குப் புரியும். அவரே சொல்லும்போது அதன் உணர்வுகள் வேறு அல்லவா?
தான் வாழும் இடத்தில் இருந்து தன் வேர்களை அறுத்துக் கொண்டு வேரிடம் சென்று வாழ நேர்ந்த பின்னணியைக் கொண்டவர் முத்து. புலம் பெயர்பவர்கள் தம் நிலத்தில் இருந்து பிடி மண்ணைச் சுமந்து சென்று புது இடத்தில் வைத்து வாழ்வைத் தொடங்குவார்கள். நாம் இப்போது வசிப்பதும் நம் மண்தான் என்கிற பிடிப்பை உண்டாக்கும் ஒரு சடங்கு. புலம் பெயர்ந்த தமிழர்களின் பிடிப்பு தமிழ் மொழிதான்.
Add Comment