வேலையில்லாப் பட்டதாரி
கல்லூரிப் படிப்பு முடிந்ததும், பத்தாண்டுகள் அரசாங்கத்துக்கு வேலை செய்ய வேண்டும். மாநில அரசின் கல்வி உதவித் தொகையைப் பெற்றுப் படிப்பவர்களுடன் அரசு இப்படியொரு ஒப்பந்தம் போட்டிருந்தது. முத்துவின் முதல் வருடக் கல்லூரிக் கட்டணத்துக்கு மலேசிய இந்தியன் காங்கிரஸ் உதவியது. அடுத்தடுத்த வருடங்களுக்கு மாநில அரசின் நல்கையைப் பெற்றே படித்தார்.
எண்பதுகளின் மத்தியில் மலேசியா கடும் பொருளாதார நெருக்கடியில் இருந்தது. வேலையில் இருப்பவர்களுக்கே சம்பளம் கொடுப்பது சவாலாக இருந்தது. புதிதாக வேலைக்குச் சிலரைச் சேர்த்துச் சுமையை ஏற்றிக் கொள்ள விரும்பவில்லை அரசு. எனவே, ஒப்பந்தத்தை ரத்து செய்து நீங்களே உங்கள் வழியைப் பார்த்துக் கொள்ளுங்கள் என்று அனுப்பிவிட்டது.
முத்து, வேலையில்லாப் பட்டதாரியாகக் கொஞ்ச காலம் வேலைதேடிக் கொண்டிருந்தார். கிள்ளான் தொழில்நுட்பக் கல்லூரி ஒன்றில் பயிற்றுவிக்கும் வேலை கிடைத்தது. 800 ரிங்கிட் சம்பளம் எனச் சொல்லியிருந்தாலும் அதை முழுதாகப் பெற்றதில்லை. புதிதாகத் தொடங்கப்பட்ட சிறு நிறுவனம் அது. சும்மா இருக்காமல் ஏதோ வேலைக்குச் சென்று கொண்டிருந்தார். அவ்வளவுதான்.
Add Comment