“அண்ணா, நான் சுரங்கத்தில் மாட்டிக்கொண்டேன் என்று அம்மாவிடம் சொல்லாதே. வருத்தப்படுவார்கள்.” மெல்லிய, சோர்வடைந்த குரலில் புஷ்கர், அண்ணன் விக்ரமிடம் சொல்கிறார். உத்தரகாசி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள சுரங்க விபத்தில் சிக்கியிருக்கிறார் புஷ்கர். அவரது அம்மா கவலைப்படக் கூடாதென்பதே அவரது முதல் கவலை. உள்ளே மாட்டியிருக்கும் 41 பேரும் உறவினருடன் பேசுகையில் தவறாமல் கேட்ட ஒரே கேள்வி, “நாங்கள் எப்போது வெளியே வருவோம்?” என்பதுதான்.
17 நாள் போராட்டத்துக்குப் பிறகு சுரங்கத்தில் சிக்கியவர்களை மீட்டிருக்கிறார்கள்! ஒவ்வொரு கணமும் என்ன நடக்குமோ என்று மொத்த தேசத்தையும் அச்சத்திலேயே வைத்திருந்த இச்சம்பவத்தின் பின்னணி எந்த ஒரு த்ரில்லர் படத்தையும் விஞ்சக்கூடியது.
உத்தரகாசி மாவட்டம், இமயமலையின் பனிப்பாறைகள் ஈந்திருக்கும் கங்கையும், யமுனையும் உருவாகுமிடம். கங்கோத்ரி, யமுனோத்ரி, கேதர்நாத், பத்ரிநாத் என்ற சார்தாம் (நான்கு புண்ணியத் தலங்களைக்) கொண்டது. யமுனோத்ரியை அடைய உதவுவது பிரம்மகால்-யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலை NH -134.
மலைகளை சுற்றிப் பயணிப்பதற்குப் பதில், அதைக் குடைந்து உருவாகும் சுரங்கங்களால் பயண நேரம் குறையும். உத்தரகாசியில் இந்நெடுஞ்சாலை கிளை பிரிந்து, சில்க்யாரா மற்றும் பார்கோட் கிராமங்களை சுரங்கம் வழியாக இணைப்பதற்காக உருவானதே இத்திட்டம். இதனால் யமுனோத்ரியின் தொலைவு 20 கிமீ குறையும். அனைத்துப் பருவநிலையிலும் உபயோகிக்க ஏதுவான இருவழித் திட்டமிது. 4.5 கிமீ நீளமும், 13 மீ அகலமும், 9 மீ உயரமும் உடைய இந்த சுரங்கப்பாதையின் கட்டுமானப் பணிகள் தொண்ணூறு சதவீதம் முடிந்துவிட்டன.
Add Comment