புரூஜ் கலீபா கோபுரத்திற்குப் போய் சுடச்சுட ஒரு கோப்பைத் தேநீர் சாப்பிட வேண்டும் என்று வைத்துக் கொள்வோம். தேநீர் தயாராவதற்கு முதலில் தண்ணீர் கொதிக்க வேண்டும். வழக்கமாகத் தண்ணீர் நூறு பாகை செல்சியஸில் கொதித்து விடும் இல்லையா..? ஆனால் அந்த இரண்டாயிரம் சொச்சம் அடி உயரமான கோபுரத்தின் உச்சியில் நீர், தொண்ணூற்றி ஏழு பாகை செல்சியஸிலேயே கொதித்து விடும். எதனால் இப்படி நடக்கிறது?
தண்ணீர் கொதிப்பதற்கு கேத்தலின் உள்ளே உள்ள அமுக்கம், சுற்றியிருக்கும் வளிமண்டல அமுக்கத்திற்குச் சமனாக வேண்டும். புவி மேற்பரப்பிலிருந்து உயரம் கூடக் கூட, வளிமண்டல அமுக்கம் குறைவது இயற்பியல். ஆக, உயரமான மலையுச்சிகளிலும், கோபுரங்களிலும் தண்ணீரின் கொதிநிலை அங்கேயுள்ள குறைந்த அமுக்கத்திற்கு ஏற்றவாறு குறைவாக இருக்கும். நமக்குக் காரியமும் சீக்கிரமாக ஆகிவிடும்.
மலையுச்சி சரி… அதையும் தாண்டி விண்வெளி உயரத்துக்குப் போனால் என்ன ஆகும்..? அமுக்கம் இன்னும் இன்னும் சறுக்கிக் கொண்டே போகும். கொதிநிலையும் குறைந்துகொண்டே போகும். உண்மையைச் சொல்வதானால் ஒரு கட்டத்தில், கொதிநிலை, முப்பத்தியேழு பாகையில் வந்து நிற்கும். அதாவது நமது உடலின் வெப்பநிலையில்..! அந்த இடத்தில், உடலில் உள்ள எல்லா திரவங்களும், கொதித்து ஆவியாகத் தொடங்கும். உமிழ்நீர், வியர்வை, சிறுநீர், இழையங்களில் உள்ள திரவம், சுவாசச் சிற்றறைகளில் உள்ள ஈரம் எல்லாமே உடலை விட்டுத் தப்பித்து ஓடும். நாமும் அப்படியே மூர்ச்சையாகி விடுவோம். அந்த எல்லைக் கோட்டை, ‘ஆம்ஸ்ட்ராங் கோடு’ என்பார்கள். சந்திரனில் முதலில் கால் வைத்த நீல் ஆம்ஸ்ட்ராங்கிற்கும் இந்தக் கோட்டுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அமெரிக்க வான்படை வீரர் ஜார்ஜ் ஆம்ஸ்ட்ராங் இந்த அமுக்கக் குறைவு சங்கதியையும் எல்லைக் கோட்டையும் முதலில் கண்டுபிடித்தமையால் அவர் பெயரையே வைத்துவிட்டார்கள். ஆம்ஸ்ட்ராங் கோடு, பூமியிலிருந்து சுமார் பத்தொன்பது கி.மீ தூரத்தில் இருக்கிறது.
Add Comment