நமது பூமியின் சரிபாதி அளவான செவ்வாய்க்கு ஏன் இத்தனை முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் அறிவியலாளர்கள்? செவ்வாயில் போய் குடியிருக்க வேண்டும் என்கிற திடசங்கற்பத்தோடு திரியும் எலான் மஸ்க் ஆக இருக்கட்டும், ஏனைய விண்வெளி ஆய்வு நிலையங்களாக இருக்கட்டும்…. அந்தக் கிரகத்தில் இங்கே இல்லாத எதனைக் கண்டார்கள்? பூமியின் இரு துருவங்களை விடவும் குளிரான காலநிலை,தரை முழுவதும் துருத் துணிக்கைகளான மண், மிக மெல்லிய வளிமண்டலம்…. இப்படி எந்தக் கோணத்தில் பார்த்தாலும் வாழும் தகவுள்ள ஒரு கோளாகத் தெரியவில்லையே.? ஏன் எத்தனையோ கோடிகளை அங்கே கொண்டு போய்க் கொட்டுகிறார்கள்.?
பூலோகத்துடன் ஒப்பிடுகையில் ஏனையக் கோள்களை விடவும் செவ்வாய் சற்று அதிகம் நெருக்கமானது. ஒரே மாதிரியான இயல்புகளைக் கொண்டது. கோள் மண்டலத்தில் நமக்குப் பக்கத்து இருக்கையில் வேறு அமர்ந்திருக்கிறது. இப்போதைக்கு, வியாழனுக்கோ, சனிக்கோ போவதைவிட, செவ்வாய்ப் பயணம் ஓரளவு பழகிவிட்டது. இதுவரை செய்து வந்த ஆய்வுகளின் படி, உயிர்கள் குடியிருந்தமைக்கான சான்றுகளும் அங்கே கிடைத்திருக்கின்றன. ஆதிகாலத்தில் வெள்ளங்கள் பெருக்கெடுத்தமைக்கான தடயங்களும், உயிர்வாயுவின் எச்சங்களும் இரசாயன ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளன. கையிருப்பில் உள்ள தகவல்களுடன், இன்னும் துருவித் துருவித் தேடிப் பார்த்தால் நமது மொத்த சூரியக் குடும்பத்தினதும் வரலாற்றினைக் கூட அங்கிருந்து கண்டறிவதற்கு வாய்ப்பு இருக்கிறது. வரலாறு முக்கியமில்லையா?
Add Comment