தனியார் வாகனங்கள் இல்லாமல் வடபழனி வெங்கீஸ்வரரைத் தரிசிக்க எளிய உபாயம் மெட்ரோ. மெட்ரோவில் செல்லும்போதே, ‘என் அப்பனைப் பார்க்கும்முன் என்னை தரிசி’ என்பார் வடபழனி முருகன். கோபுர தரிசனம் காட்டிக் கோடி புண்ணியம் தந்து நம்மை அழைப்பார். புண்ணியம் வந்த பிறகு பாவம் அழியும் தானே? பாவம் மட்டுமல்ல… வறுமை, பிணி போன்றவற்றையும் அகற்றுபவர்.
ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பழமையானவர் இந்த வேங்கீஸ்வரர். சாந்தநாயகி சமேதராக நூறடி சாலையை ஒட்டி நகரின் மத்தியில் அமர்ந்திருக்கிறார். இச்சாலை வருவதற்கு முன்பு உள்ளூர் மக்களால் மட்டுமே தரிசிக்கப்பட்ட கோயில். முற்காலத்தில் புகழ் பெற்றிருந்த இத்தலம் பின்னாட்களில் யாருமறியா ரகசியமாகப் பலகாலம் இருந்துவந்திருக்கிறது. இன்றைக்கு மீண்டும் வேங்கீஸ்வரர் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறார். காரணம், கோடம்பாக்கம் சினிமாக்காரர்கள். இங்கே வேண்டிக்கொண்டால் உடனே படம் கமிட் ஆகும், வெளிவராமல் இழுத்தடிக்கும் படம் சீக்கிரம் வெளிவரும், வராக் கடன்கள், சம்பள பாக்கிகள் வந்து சேரும் என்று என்னென்னவோ நம்பிக்கைகள் உலவுகின்றன. ஆனால் ஈசன் இவற்றுக்கெல்லாம் அப்பால் இன்னும் என்னென்னவோ செய்பவராக இருக்கிறார்.
Add Comment