2026 தேர்தலை முன்னிட்டு, தமிழகத்தின் அரசியல் களம் பரபரப்பான சூழலை முன்கூட்டியே தொட்டுவிட்டது. 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலைப் போல ஏமாந்துவிடக்கூடாது என நினைத்த பாஜக, தேர்தலுக்கு ஒரு வருடம் இருக்கும் சூழலிலும் அமித்ஷாவைத் தமிழகத்துக்கு அனுப்பி எடப்பாடியை கார்னர் செய்தது. பரபரப்புக்கு இதுமட்டுமே காரணம் அல்ல. தமிழகத் திரைத்துறையில் புகழ்பெற்ற நட்சத்திரமான விஜய் அரசியலில் களம் இறங்கியிருப்பதுவும் மிக முக்கியமான காரணம்.
அண்ணாவுக்குக் காமராஜர், கருணாநிதிக்கு எம்ஜிஆர், ஜெயலலிதா என்ற போட்டி வரிசையில் ஸ்டாலினுக்குப் போட்டி யார் என்ற கேள்வியும் இருந்தது. எடப்பாடிதான் ஸ்டாலினுக்குப் போட்டி என்பதை ஏற்பதற்குரிய களச்சூழல் இதுவரை அமையவில்லை. எடப்பாடி தலைமை வகிக்கும் அதிமுக சந்தித்த அத்தனை தேர்தல்களிலும் தோல்வியைச் சந்திக்க, அதிமுகவின் தொண்டர்கள் சோர்வுக்குள்ளாகினர். கலைஞரும் ஜெயலலிதாவும் இல்லாத சூழலில் தமிழக அரசியலில் ஒரு வெற்றிடம் உருவாகியிருப்பதாக அனைவரும் நம்பத் தொடங்கியிருந்தார்கள்.
அப்படி நம்பியவர்களில் தமிழகத் திரைத்துறையின் உச்ச நட்சத்திரங்களான ரஜினியும் கமலும் தவிர்க்க முடியாதவர்கள். 1990களிலேயே ரஜினி அரசியலுக்கு வருவார் என எதிர்பார்த்துக் காத்திருந்த அவரது ரசிகர்களும், அவரை எப்படியாவது அரசியலுக்குக் கொண்டுவந்துவிடலாம் என யோசித்தவர்களும் இறுதியில் ஏமாந்து போனார்கள். தன்னால் அரசியலுக்கோ, அரசியலால் தனக்கோ எந்தப் பிரயோஜனமும் இல்லை என நினைத்த அந்த நாளில் இந்த ஆட்டத்திலிருந்து விலகிக்கொண்டார் ரஜினிகாந்த்.














Add Comment