97. பிரம்ம லிபி
ருத்ர மேருவின் அடிவாரத்தில் சர்சுதியின் கரையில்தான் படுத்திருந்தேன். பல நாள்களாக உறக்கமற்று இருந்ததனாலோ, எல்லாம் போதுமென்ற நிச்சலனம் உண்டாகியிருந்ததனாலோ, வழக்கத்தினும் அதிகம் பசித்து, வழக்கத்தினும் அதிகம் உண்ட களைப்பினாலோ தெரியவில்லை. எவ்வளவு நேரம் உறங்கினேன் என்றே தெரியாமல் உறங்கிக் கிடந்திருக்கிறேன். கண் விழித்தபோது ருத்ர மேருவின் நதிக்கரையோரப் பாறைகளைக் காணவில்லை. அங்கே பாயும் நதியின் தோற்றத்துக்கு நிறமே இருக்காது. ஆழம் உண்டென்றாலும் நீரின் அடிப்பரப்பு தெள்ளத் தெளிவாகத் தெரியும். மஞ்சள் நிறப் பாறைகளும் உருளும் கூழாங்கற்களும் அவற்றின் இடையே நீந்திச் செல்லும் மச்சங்களின் நிறமும்கூட மேலிருந்தே கண்ணுக்குத் தெரியும். இப்போது அது அப்படியில்லாமல் வெளிர் நீல நிறத்துடன் சர்சுதி ஓடிக்கொண்டிருக்கக் கண்டு சிறிது திகைத்துப் போனேன். சட்டென்று எழுந்து சுற்றுமுற்றும் பார்த்தபோதுதான் நான் படுத்துறங்கிய இடத்தில் எழவில்லை என்பது விளங்கியது. நான் இருந்த கரைக்குக் கண்ணெட்டும் தொலைவு வரை நானறிந்த நிலப்பரப்பின் ஒரு சுவடும் இல்லை என்பது முதலில் அதிர்ச்சியாகவும் பிறகு வினோதமாகவும் இருந்தது. இன்னும் சரியாக உறக்கம் கலையாததால் உண்டாகும் தோற்ற மயக்கமென்று நினைத்தேன். நதியில் பாய்ந்து சிறிது நேரம் நீந்திக் களித்துப் புத்துணர்ச்சி சேமித்துக்கொண்டு கரை மீண்டபோதுதான் எல்லாம் தெளிவாகப் புலப்பட்டது.
நான் உறங்கிக் கிடந்தபோது யாரோ தூக்கி வந்து இங்கே போட்டிருக்க வேண்டும். யாராக இருக்கும், எதற்காக இருக்கும் என்றெல்லாம் எனக்கு சிந்திக்கத் தோன்றவேயில்லை. காரணமென்று ஒன்று இருக்குமானால் அது தன்னால் என்னை வந்தடையும் என்ற தெளிவு முதல் முறையாக அப்போது ஏற்பட்டது. என்னுடைய நிதானம் எனக்கே வினோதமாக இருந்தது. எதனால் இது, எப்படி இது என்று எண்ணிப் பார்த்தேன். அங்கீரச மகரிஷியைக் கண்டு அவர் தாள் தொட நேர்ந்தது காரணமாக இருக்கலாம் என்று முதலில் நினைத்தேன். ஆனால் கூர்ந்து யோசித்துப் பார்த்தால், என் வசம் மீதமிருந்த பைசாசங்களை விடுவித்து அனுப்பிவிட்டு ஒன்றுமில்லாதவனாக வித்ருவின் எல்லையில் நின்றபோதே கிட்டத்தட்ட அந்த உணர்வின் விளிம்பை எட்டிப் பிடித்துவிட்டிருக்கிறேன் என்று தோன்றியது.
இதுவும் நன்றாகத்தான் இருக்கிறது. எது குறித்தும் விசனம் கொள்ளாமல், எதையும் எண்ணிக் கலங்காமல், எதுவுமற்றதில் எல்லாம் உள்ளதாக எண்ணிக்கொண்டு திளைப்பதன் போதம். சட்டென்று ரிஷியின் நினைவு வந்தது. இப்போதும் நான் அவனுக்கு எதிர் எல்லையில்தான் நின்றுகொண்டிருக்கிறேன் என்று தோன்றியது. அவன் பூரணத்தினுள் நின்றுகொண்டு அதிலுள்ள ஒன்றுமில்லாமையை ஏந்தி அருந்துபவன். அதில் திளைத்துத் தணிபவன். தனது அமைதி, தனது மௌனம், தனது தீர்க்கத்தின் சாறைக் கமண்டலத்தில் ஏந்தி எடுத்து வைத்துக்கொண்டு தன்னை நெருங்கும் ஒவ்வொரு உயிரின் மீதும் தனது பவித்ர விரலினால் தொட்டுத் தெளிப்பவன். அவனது வாழ்நாளில் கமண்டலத்தைக் கவிழ்த்து அள்ளிக் கொட்டிச் சபித்தது என்னை மட்டுமாகத்தான் இருக்கும் என்று தோன்றியது. அன்றைய மனநிலையில் அது எனக்கு சாபம்தான். சந்தேகமே இல்லை.
ஆனால் இப்போது ஏனோ அப்படித் தோன்றவில்லை. வாழ்வில் எந்த தெய்வத்தினாலும் தர இயலாத பெரும் வரமொன்றையே அவன் எனக்குத் தந்திருக்கிறான் என்று நினைத்தேன். ஒன்றுமில்லாமையின் பூரணம். புத்தி உள்பட. நிச்சயமாகவே அது தரும் பரவசத்துக்கு நிகரே இல்லை. வாழ்வில் சாதாரணமான ஒருவனாக இருந்துவிட்டுப் போவதன் சுகம் எனக்கு அப்போதுதான் புரிய ஆரம்பித்திருந்தது. அது நிகரற்றது. தவிர, நிரந்தரமானதும்கூட.
Add Comment