அதிமுக உள்கட்சி விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தத் தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் உண்டு என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. தேர்தல் சின்னங்கள் ஒதுக்கீட்டு விதிகளின்படி விசாரணை மேற்கொள்ளலாம் என்றும் அறிவித்திருக்கிறது.
திமுகவுக்கு வலுவான மாற்றாக எம்ஜிஆரால் தோற்றுவிக்கப்பட்ட கட்சி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம். கருணாநிதிக்கும் திமுகவுக்கும் சிம்ம சொப்பனமாக விளங்கி பத்து வருடங்களுக்குக் கட்டுக்கோப்பான கட்சியாக வைத்திருந்தார். ஆட்சியும் பத்து வருடங்கள் அதிமுக வசமே இருந்தது. அவர் மறைவுக்குப் பிறகுதான் கலகங்களுக்குப் பெயர் போன கழகமாக ஆனது. அவர் மறைந்த வருடமே, ஜானகி – ஜெயலலிதா கோஷ்டிகள் இரட்டை இலையை ஆளுக்கொன்றாகப் பிய்த்து சேவலாகவும், இரட்டைப் புறாக்களாகவும் மாற்றிக்கொண்டன. பலன், பத்து ஆண்டுகள் வனவாசத்தில் இருந்த திமுகவை மீண்டும் தமிழ்நாடு ஆட்சிக்குக் கொண்டுவந்தது.
ஜானகியின் நிர்வாகத் திறமையின்மையும் ஜெயலலிதாவின் ஆளுமையும், சட்டசபை நாடகமும் இணைந்து அடுத்த வருடமே இரட்டை இலையை மீட்டெடுத்து வந்தன. ஜெயலலிதா-ராஜிவ் கூட்டணியின் வியூகத்தில் திமுக அரசு அடுத்த இரண்டு வருடங்களிலேயே கலைக்கப்பட்டது. ராஜிவின் மரணம் கைகொடுக்க, பெருவெற்றியோடு அதிமுக தனது முதல் கலகத்தின் முடிவுரையை 1991ல் எழுதியது. மீண்டும் ஆட்சிக்கு வந்தது.
Add Comment