ஆப்பிள் பெண்ணே நீ யாரோ?
ஆப்பிளுக்கு ஏ.ஐ. அலர்ஜி. இருந்தது. இப்போது குணமாகியுள்ளது. ஆப்பிள் இதுவரையிலும் ‘ஆர்ட்டிஃபீசியல் இன்டெலிஜென்ஸ்’ என்னும் வார்த்தைப் பிரயோகத்தைத் தவிர்த்தே வந்துள்ளது. சென்ற வாரம் நடந்தேறிய WWDC 2024 நிகழ்வில், உலகத் தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறையாக, ஆர்ட்டிஃபீசியல் இன்டெலிஜென்ஸ் என்று ஆப்பிள் உச்சரித்தது.
அப்படியென்றால் இதுவரையில் ஆப்பிள் ஈக்கோ சிஸ்டத்தில் ஏ.ஐயே கிடையாதா? என்னும் கேள்வி எழலாம். இருக்கிறது. சொல்லப்போனால் சிறப்பாகவே இருக்கிறது. உதாரணமாக ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச்களில் “ஃபால் டிடெக்ஷன்” (Fall Detection) என்னும் பயன்மிகு வசதியொன்றுள்ளது.
ஆப்பிள் வாட்ச் அணிந்திருக்கும் ஒரு பயனர் திடீரெனக் கீழே விழுந்து விட்டால், ஃபால் டிடெக்ஷன் விழித்துக்கொள்ளும். அவரை அலர்ட் செய்ய முயலும். தொடர்ந்து சில விநாடிகளுக்குப் பயனர் அசைவின்றிக் கிடந்தால், அவசர மருத்துவ உதவிக்குத் தகவல் தெரிவிக்கும். இந்த வசதி உயிர் காக்கும் ஒன்றாக இருந்து வருகிறது.
இந்த ஃபால் டிடெக்ஷன் வசதிக்குப் பின்னிருப்பது மெஷின் லேர்னிங். நிச்சயம் மெஷின் லேர்னிங் ஏ.ஐ.யின் ஓரங்கம் தான். ஃபால் டிடெக்ஷன் போலவே வேறு சில வசதிகளும் இருக்கின்றன. ஆனாலும் ஏனோ, ஆப்பிளுக்கு ஏ.ஐ. என்று சொல்வதில் விவரிக்கவியலாத் தயக்கமொன்று இருந்தே வந்துள்ளது.
Add Comment