உலகின் எந்த மூலையில் எந்தெந்த நாட்டுக்கு இடையே போர் உண்டானாலும் கடல் பரப்பில் போர்க்கப்பல்கள் தயார் நிலையில் உலா வரும் புகைப்படங்களை உடனே பார்க்கிறோம். அக்கப்பல்களிலிருந்து போர் விமானங்கள் சீறிப் பறப்பதையும் ஏவுகணைகள் எரிந்துகொண்டே பாய்வதையும் ரீல்ஸில் பார்க்கிறோம். பழைய பேர்ல் ஹார்பர் போன்ற ஹாலிவுட் படங்களிலும் பார்த்திருக்கலாம். போர் விமானங்கள் நடுக்கடலில் இருந்து சீறிப் பாயும். விமானம் வேகம் பிடிப்பதற்கான ஓடுதளம் ஒரு கப்பலில் அமைக்கப்பட்டிருக்கும். அத்திரைப்படத்தில் காண்பிக்கப்பட்ட கப்பலின் பெயர் யுஎஸ்எஸ் லெஃஸிங்டன் (USS Lexington). அது போருக்காகவே விசேஷமாகத் தயாரிக்கப்பட்ட கப்பல். குறிப்பாக, போர்விமானங்களைத் தாங்கிச் செல்வதற்காகத் தயாரிக்கப்பட்டது. இவ்வகையான கப்பல்களை விமானம் தாங்கிப் போர்க் கப்பல்கள் (Aircraft Carriers) என அழைக்கிறார்கள்.
முதலாம் உலகப்போர் காலகட்டத்தில் பிரிட்டன் ஒரு பயணியர் கப்பலை விமானம் தாங்கிப் போர்க் கப்பலாக மாற்றியது. ஆனால் அது போரில் பயன்படுத்தப்படவில்லை. அதன்பிறகு அமெரிக்காவும் ஜப்பானும் 1922இல் தனித்தனியே இது போன்ற கப்பல்களை உருவாக்கின.
இந்தக் கப்பல்களில் விமான ஓடுதளம், விமானக் கட்டுப்பாட்டு மையம், தொலைத்தொடர்புச் சாதனங்கள், விமானங்களை நிறுத்திவைக்கும் பகுதியான ஹேங்கர் (Hangar), எதிரிகளைக் கண்காணிக்கும் ரேடார் கருவிகள், ஏவுகணைகள் உள்ளிட்ட ஆயுதங்கள், ராணுவத்தினர் தங்குவதற்கான குடியிருப்புகள் ஆகியவை இருக்கும்.















Add Comment