“முயற்சியைக் கைவிடாதீர்கள். நல்லவர்கள் எதுவும் செய்யாமல் இருப்பதே, தீமை வெல்வதற்குப் போதுமானதாகிறது. அதனால்தான் சொல்கிறேன், செயல்படாமல் இருந்து விடாதீர்கள். என்னைக் கொல்ல முடிவு செய்கிறார்கள் என்றால், நாம் அந்த அளவிற்கு சக்தி வாய்ந்தவர்கள் என்று பொருள். தவறு செய்பவர்களால் ஒடுக்கப்படும் அளவிற்கு நாம் வளர்ந்து விட்டோம். இந்தச் சக்தியைப் பயன்படுத்தி, நமது முயற்சியைக் கைவிடாமல் தொடருங்கள்.” இறந்துபோன அலெக்ஸி நவல்னி, மக்களுக்காக விட்டுச்சென்ற செய்தி இது.
ஜனவரி 2021-ஆம் ஆண்டு, மாஸ்கோ விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார் நவல்னி. ரஷ்ய அரசாங்கத்தின் ஊழல்களை நிரூபித்ததே அவர் செய்த குற்றம். மூன்றரை வருடச் சிறைத் தண்டனையில் ஆரம்பித்தது, முப்பது வருடத் தண்டனையாக மாறியது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், சைபீரியச் சிறைக்கு மாற்றபட்டார். பிப்ரவரி 16-ஆம் தேதி நடைப்பயிற்சி முடிந்து, சுயநினைவிழந்து கீழே விழுந்திருக்கிறார். சுவாசத்தை மீட்க முயன்ற அரைமணி நேர அவசர சிகிச்சை பலனளிக்கவில்லை. அதன்பின் மருத்துவமனை சிகிச்சையும் பலனின்றி, நவல்னி இறந்துவிட்டதாக அறிவித்திருக்கிறது ரஷ்யச் சிறை நிர்வாகம்.
ஆர்டிக் கடுங்குளிரிலும் மன உறுதியையும், நகைச்சுவையையும் இழக்காமலிருந்தார் நவல்னி. சைபீரியச் சிறைப் பயணத்தின் போது வளர்ந்த தாடியுடன், குளிருக்கான மேலங்கியும் தொப்பியும் அணிந்திருக்க, “நான்தான் உங்கள் புதிய சாண்டா கிளாஸ்” என்று பதிவிட்டிருந்தார். பிப் 14-ஆம் தேதி, மனைவிக்குக் காதலர்தின வாழ்த்து அனுப்பியிருந்தார், வழக்கறிஞர் உதவியோடு. 15-ஆம் தேதி காணொளி வாயிலான விசாரணை முடிவில் நீதிபதியிடம், “எனது வங்கிக்கணக்கு விவரங்களை உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன். உங்கள் பெருத்த சம்பளத்திலிருந்து எனக்கும் கொஞ்சம் அனுப்பி வையுங்கள். உங்கள் அபராதங்களால் எனது வங்கியிருப்பு சீக்கிரமே தீர்ந்துவிடும். அதனால் சீக்கிரம் அனுப்பி வையுங்கள்” என்றார் சிரித்துக் கொண்டே. நீதிபதியும், புன்னகையுடன் தலையசைத்துக் காணொளியிலிருந்து விடைபெற்றிருந்தார். ஒரு சர்வாதிகாரத்தையே எதிர்த்து நின்று சிறைப்பட்டாலும், அவரது பாணியிலேயே தொடர்ந்து அதை எதிர்கொண்டார் நவல்னி.
இவரது இறப்புச்செய்தி உலகெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளை மற்றும் சிவப்பு வண்ண ரோஜாக்கள் ரஷ்ய வீதிகளில், அவரது உருவப்படத்தை மேலும் அழகாக்குகின்றன. அவர் விட்டுச்சென்ற உண்மை எனும் ஒளி, அவரருகில் இன்னும் ஒளிர்ந்து கொண்டிருக்கிறது. இந்தச் செய்தியை ரஷ்ய மக்கள் முதலில் நம்பவில்லை. புரளி என்றுதான் நினைத்தார்கள். “அதிகாரப்பூர்வச் செய்தி வந்தவுடனே, நாங்கள் மனமுடைந்து அழுதோம்” என்கின்றனர் ரோஜாக்களோடு அஞ்சலி செலுத்த வந்தவர்கள். இப்படியொன்று நடக்க முடியாது என்றே அவர்கள் நம்பியிருந்தார்கள், பாவம். ஒரு சிலருக்கு எதிர்க்கட்சித் தலைவரான நவல்னியின் மரணம் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. அதிபர் புதினின் அரசாங்கத்தை எதிர்ப்பவர்களின் கதி, அவர்களுக்கு ஏற்கெனவே தெரிந்திருந்தது.
புதினை எதிர்த்து மிகவும் துணிச்சலாகக் குரல் கொடுத்தவர் அலெக்ஸி நவல்னி. உண்மையின்பால் மக்களை ஈர்க்கும் ஆற்றலைக் கொண்டிருந்தார். நிர்வாகத் திறமைகளோடு, நவீன நுட்பங்களுடன் கூடிய ஆதாரங்களோடு, மக்களை அணுகினார். மக்களில் ஒருவராக ஏற்றுக்கொள்ளப்பட்டார். இதனாலேயே ரஷ்ய அரசுக்கு மிகவும் ஆபத்தானார். இவருக்கு நேர்ந்த மரணம் ரஷ்யாவிற்குப் பழகிப்போன ஒன்றுதான்.
அசாஞ்சே குறித்த் முதல் வரியும், கட்டுரையின் கடைசி வரியும் தவிர்க்கப் பட்டிருக்கலாம்.
அருமையான கட்டுரை
அருமையான கட்டுரை. சுவாரஸ்யமானா எழுத்து.
‘ஆசிரியரின் பிற கட்டுரைகளை வாசிக்க’ வழி ஏற்படுத்தலாம்.