ஜனநாயகத்தின் சிம்மாசனமான அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டன் டிசியில் ஜனநாயகத்தையே மிரட்டும் காட்சிகள் கட்டவிழ்கின்றன. 2025 ஆகஸ்ட் 11 அன்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளதாகக் கூறி வாஷிங்டன் டிசி காவல்துறையைக் கூட்டாட்சி அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தார். 800 தேசியக் காவல்படை வீரர்கள் நகரத்தில் களமிறக்கப்பட்டனர். ‘நமது தலைநகரை மீட்டெடுக்கும் விடுதலை நாள் இன்று’ என டிரம்ப் பெருமையுடன் அறிவித்தார். ஆனால் உண்மை என்ன?
அமெரிக்க நீதித்துறையின் அறிக்கையின்படி, 2024இல் வாஷிங்டன் டிசியில் வன்முறைக் குற்றங்கள் 30 ஆண்டுகளில் இல்லாத மிகக் குறைந்த அளவை எட்டியுள்ளன. அப்படியானால் என்ன அவசரநிலை?
வாஷிங்டன் மேயர் முரியல் பௌசர், ‘எங்கள் நகரில் மக்கள் வணிகம் தொடங்குகிறார்கள், குடும்பங்களுடன் வாழ்கிறார்கள், இது அவசரநிலை அல்ல’ எனத் தெளிவாகக் கூறுகிறார். மேயருக்குத் தெரியாதா நகரின் குற்றங்களும் மக்களின் அச்சமும்? ஆனால் டிரம்ப் இதை மறுத்துள்ளார். ‘வன்முறைக் கும்பல்கள், ரத்தவெறி கொண்ட குற்றவாளிகள், கட்டுப்பாடற்ற இளையோர் கும்பல்கள், போதைப் பழக்கம் கொண்ட மனநோயாளிகள் மற்றும் வீடற்றவர்களால் நமது தலைநகர் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது’ என்று உணர்ச்சிகரமாகப் பேசியுள்ளார்.















Add Comment