கடைசியில் அது நடந்துவிட்டது. நாம் இரண்டு வருடங்களுக்கு முன்பே கணித்தது போல ஜே.வி.பி தலைவரும், தேசிய மக்கள் கூட்டணியின் தலைவருமான அநுரகுமார திஸாநாயக்க இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதியாகத் தேர்வாகி இருக்கிறார்.
எந்தவித பிரபுத்துவப் பின்னணியுமில்லாத ஒரு பிசிக்ஸ் பட்டதாரி இலங்கையின் அதியுயர் பதவிக்குத் தேர்வானதை ஒரு புரட்சியாக வர்ணித்திருந்தன செய்தி சேகரிக்க முகாமிட்டு இருந்த சர்வதேச ஊடகங்கள். ஆனால் எல்லாவற்றையும் விடப் பெரிய புரட்சி என்னவென்றால் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வெறும் மூன்று சதவீத வாக்குகளையே பெற்று இருந்த கட்சியின் தலைவர் ஐந்தாண்டு கால இடைவெளிக்குள் தம் கட்சியை மீளுருவாக்கம் செய்து மிகச் சிறப்பாய்க் காய்நகர்த்தி அதிகாரத்தை எட்டிப் பிடித்ததுதான். இப்படி ஒரு சரவெடி சம்பவம் எந்தவொரு ஜனநாயக நாடும் காணாத ஒன்று.
ஜே.வி.பி இன் சுவாரசியமான கதைகளைக் கேட்க லட்சக்கணக்கில் கூட்டம் அலைமோதும். ஆனால் வாக்குப் பெட்டியைக் கவிழ்த்தால் ஒன்றும் தேறாது என்ற நிலைமையே கடந்த பத்து ஆண்டுகாலமாய் இருந்தது. இதற்கு முற்றிலும் மாற்றமாய் சோஷியல் மீடியாக்களிலோ பலத்த ஆதரவு இருந்தது. இதனால் ‘அநுர ஃபேஸ்புக்கில் மட்டும் தான் ஜனாதிபதி, சீமானின் சிங்கள வேர்ஷன்’ என்று கேலிக்கும் கிண்டலுக்குமுள்ளானார். இந்த ஜனாதிபதித் தேர்தல் வெற்றி அத்தனை காயங்களுக்கும், எள்ளல்களுக்கும் ஒத்தடமாய் அவருக்கு அமைந்திருக்கிறது.
Add Comment