ஜனாதிபதியாக அநுரகுமார திஸாநாயக்க பதவியேற்று இன்றைக்குச் சரியாக மூன்று மாதங்கள் ஆகின்றன. மூன்றில் இரண்டு பலத்துடன் அவரது கட்சி பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஒரு மாதம் ஆகிறது. இந்தக் குறுகிய காலத்தில் அரசின் போக்கைப் பார்க்கும் போது கலவையான விமர்சனங்களும், நிறைய நல்லெண்ணங்களும், ஏராளமான எதிர்பார்ப்புக்களையும் மக்கள் மத்தியில் ஏற்படுத்தி இருக்கிறது.
இலங்கை சரித்திரத்தில் பிரசித்தி பெற்ற அரசியல் குடும்பங்கள் எதிலும் சம்பந்தப்படாத மிகச் சாமானியர்கள் நிறுவிய ஆட்சி இது. தேர்தல்களின் போது அநுரகுமாரவினதும் தோழர்களினதும் பிரசாரங்கள் எல்லாம் சுதந்திரத்திற்குப் பின்னரான கடந்த எழுபத்தாறு வருட சிஸ்டத்தை அடிப்பதிலேயே இருந்தன. இந்த நாட்டின் ஒழுங்கீனமான அரசியல் கட்டமைப்புக்கும் இரண்டு வருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட பொருளாதார அவலத்திற்கும் காரணமானவர்கள் அத்தனை பேரையும் தோள் உரித்து உப்பு, மிளகாய் தூவி காயவைத்தார்கள். இப்பெரும் பரப்புரைகள் பிரம்மாண்ட வெற்றியின் பின்புலமாய் அமைந்தாலும் அதைவிடப் பாரம்பரிய அரசியல் கட்சிகளின் நம்பகத்தன்மை முற்றாய்க் கரைந்து போனது. அதுதான் மக்கள் இவர்கள் பக்கம் அதிகாரத்தை அள்ளிக் கொடுக்கும் நிலைமைக்குக் கொண்டு வந்தது.
சரி அநுரகுமார திஸாநாயக்க மேடை தோறும் முழங்கியது போல அத்தனையும் நடந்து வருகிறதா? சிஸ்டம் எல்லாம் எப்படி இருக்கிறது? பொருள்களின் விலைகள் குறைந்துவிட்டனவா? ஒரு காலத்தில் கரித்துக் கொட்டிய சர்வதேச நாணய நிதியத்துடன் எப்படியான உறவுகளைப் பேணுகிறது அரசு? வாயால் மட்டுமே வடை சுடுபவர்கள் என்று விமர்சிக்கப்பட்டவர்கள் தம் தலைகளில் ஏற்றி வைக்கப்பட்டு இருக்கும் கொங்கிறீட் தூண் சுமைகளைப் பொறுத்துக் கொண்டு நகருகிறார்களா ?
Add Comment