அகழ்வாராய்ச்சிகளில் திகைப்பூட்டக்கூடிய ஏதாவது அகப்படுவது வழக்கம்தான். சமீபத்தில், தெற்கு ஜெர்மானிய நகரமான நியூரம்பெர்க்கில் அப்படியொரு சம்பவம் நடந்தது. ஓரிடத்தைக் குறி வைத்து அகழ்ந்தார்கள். அங்கே ஆயிரத்திற்கும் மேற்பட்ட எலும்புக் கூடுகளையும், சில சடலங்களின் மிச்சங்களையும்கூடக் கண்டுபிடித்துள்ளார்கள். இந்தக் கண்டுபிடிப்பில் திகைப்பு மட்டுமல்ல. அதிர்ச்சியும் சேர்ந்தே கிடைத்தது.
சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதத்தின் நடுப்பகுதியில் நியூரம்பெர்க்கில் உள்ள கிராஸ்வெய்டன்மியுலன் ஸ்ட்ராஸில் உள்ள ஒரு பகுதிக்குச் சென்றபோது, தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் இதுபோன்ற எந்தவொரு சிறப்புக் கண்டுபிடிப்புகளையும் எதிர்பார்க்கவில்லை. இப்பகுதியில் முப்பது ஆண்டுகாலப் போரின் சிதிலங்கள் இருக்கலாம் என்று வரலாற்று ஆதாரங்களில் சில குறிப்புகள் இருந்தன. அங்கு ஒரு முதியோர் இல்லம் கட்டப்பட இருந்தது. கட்டுமானப் பணிகள் தொடங்கும் முன் அந்த வரலாற்று ஆதாரங்களை ஆவணப்படுத்த வேண்டும் என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் நினைத்தனர்.
இந்த வெகுஜன புதைகுழி மிச்சங்கள் 19ஆம் நூற்றாண்டில் இருந்த ஒரு குழந்தைகள் இல்லமாக இருக்கலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் சந்தேகித்தனர். வல்லுனர்கள் மறு ஆய்வு செய்ய உத்தேசித்தனர். அவர்கள் அந்த நகரத்தில் இருந்த சிதிலமடைந்த பழைய கோட்டையையும் இடிக்கப்பட்ட வீட்டின் மிச்சங்களை மட்டுமல்ல, 17 ஆம் நூற்றாண்டிலிருந்த, அதுவரை மனித வரலாற்றில் ஆவணப்படுத்தப்பட்ட தரவுகள் இல்லாத பிளேக் சடலங்களுடன் ஒரு பெரிய கல்லறையையும் கண்டுபிடித்தனர்.
இதுவரை ஐரோப்பாவில் எந்த இடத்திலும் பிளேக் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் மிச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டதில்லை என்பது முக்கியம். அவ்வகையில் இது ஒரு முதல்.
Add Comment