முகநூலில் புகைப்படங்கள் பதிவேற்றி, விருப்பக் குறியீடுகளுக்காகக் காத்திருந்து, அதிலேயே வலம் வந்தவள் நான். முகநூல் குழுமங்களில் நடைபெற்ற போட்டிகளில் எழுதத் தொடங்கினேன். கொடுத்த தலைப்புக்கேற்பத் தோன்றுவதைக் கிறுக்கத் தொடங்கினேன். அப்போது எனக்கு ஒரு விடயம் பிடிபட்டது. எழுதுவது எனக்குப் பிடித்திருக்கிறது என்பதே அது. எழுதப் பிடித்திருக்கிறதுதான், ஆனால் நான் எழுதலாமா? எழுதுவதற்குத் தகுதியுடையவளா? எல்லாவற்றையும்விட, எனக்கு எழுத்து தேவையா? இப்படிப்பட்ட கேள்விகள் தோன்றிக் குழப்பி, பதில்களற்ற ஒரு புள்ளியில் கொண்டு வந்து நிறுத்தி விட்டன. எழுத்தாளராக வேண்டுமெனில் மரபணுவிலும் எழுதி இருக்க வேண்டும் என்பதான எண்ணமும் உண்டு எனக்கு.
2024ஆம் ஆண்டின் இறுதியில் இக்குழப்பங்கள் மேலும் தீவிரமடைந்தன. 2025ஆம் ஆண்டின் பொதுவான திட்டமிடலில் பெரும் பங்கு எழுத்துக்கும் வாசிப்புக்கும் கொடுத்து விட வேண்டும் என்று மட்டும் முடிவெடுத்தேன். ஆனாலும் தெளிவான, நேர்த்தியான திட்டமிடல் என்று எதுவும் இல்லை. ஜனவரி மாதத்தில் என் இணையத் தேடல்கள் யாவும், எழுதுவது எப்படி என்பதாகவே அமைந்தன. வலையொளியில் தேடியதில் ஆசிரியர் பாரா பேசிய காணொளித் துணுக்குகள் சில அகப்பட்டன. பூதாகரமான விடயமாய் என் மண்டையில் நான் ஏற்றி வைத்திருந்த எழுத்து குறித்தான பார்வை அவர் பேச்சில் வேறொரு எளிய கோணத்தில் தென்பட்டது. ஆசிரியரை முகநூலிலும் வாட்ஸப் சேனலிலும் பின்தொடர்ந்தேன்.















Add Comment