பாகிஸ்தான் ஆக்கிரமிப்புக் காஷ்மீரில் போராட்டங்கள் தீவிரமடைந்துவரும் நிலையில், பத்திரிகையாளர்களுக்குக் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது பாகிஸ்தான். செய்தி ஊடகங்களுக்கான சங்கங்களும் தன்னார்வ அமைப்புகளும் இதனைப் பத்திரிகைச் சுதந்தரத்தின்மீது தொடுக்கப்பட்ட தாக்குதல் என்று சாடிவருகின்றன. இது குறித்த கேள்விகளுக்கு மௌனம் சாதித்துவருகிறது பாகிஸ்தான்.
அண்மையில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி, இந்தியாவின் சில பகுதிகளில் போராட்டங்களைச் செய்திருந்தது. சில இடங்களில் வன்முறைகள் நிகழ்ந்தன. அவற்றைத் தங்களது தேசிய ஊடகங்களில் குதூகலமாக ஒளிபரப்பியது பாகிஸ்தான். பாகிஸ்தானியப் பிரபலங்களும் இன்ஃப்ளூயன்சர்களும் மாணவர் புரட்சியைக் கை தட்டி வரவேற்றனர். ‘பாருங்கள், இதுதான் இந்தியா பேசும் ஜனநாயகம்’ என்று பொதுவெளிகளில் கூடிப் பேசிக் களித்தனர்.
அப்போதே பாகிஸ்தானில் காட்சி மாறிக்கொண்டிருந்தது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்புக் காஷ்மீரிகளின் போராட்டங்களைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறியது பாகிஸ்தான். பேச்சுவார்த்தைக்குப் பதில் வன்முறையைக் கையிலெடுத்தது அரசு. உண்பதற்கு மாவு வேண்டிப் போராடிய மக்கள் மயானத்துக்கு அனுப்பப்பட்டார்கள். வன்முறைகளை உலகுக்குத் தெரியப்படுத்திய நிருபர்கள் காணாமல் போனார்கள்.
















Add Comment