2026ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பங்களாதேஷில் தேர்தல் நடப்பது உறுதியாகிவிட்டது. தேதியை இரண்டு மாதங்களுக்கு முன்னர் தேர்தல் ஆணையம் அறிவிக்கும். பங்களாதேஷ் உருவாகவும், அதன் பிறகும் எத்தனையோ புரட்சிகள் அந்நாட்டில் நடந்தன. பல ஆட்சிகள் கவிழ்ந்தன. தேர்தல்களும் நடந்தன. ஆனால் ஷேக் ஹஸினா ஆட்சி கவிழ்ந்த பிறகு நடக்கும் இத்தேர்தலில் தலைகீழ் மாற்றம் ஒன்று இருக்கிறது. பங்களாதேஷ் தனி நாடாகப் போராடிய அவாமி லீக் கட்சி தடை செய்யப்பட்டிருக்க, அதற்கு எதிராக இருந்த ஜமாத் இ இஸ்லாமி, தேர்தல் களத்தில் இருக்கிறது.
ஷேக் ஹஸினா பதவியைப் பறித்து, அவரை நாட்டைவிட்டு வெளியேற்றி ஓர் ஆண்டு முடிந்துவிட்டது. இந்த ஓராண்டில் என்ன மாற்றம் நடந்திருக்கிறது என்பது முக்கியமான கேள்வி. இடைக்கால அரசின் ஆலோசகராகப் பதவியேற்றுக் கொண்ட முஹம்மது யூனுஸ், சீர்திருத்தங்களை மேற்கொள்ள ஆணையம் அமைத்தார். அரசியலமைப்பு, தேர்தல் முறை, நீதித்துறை, காவல்துறை, ஊழல் தடுப்பு ஆணையம், பொது நிர்வாகம் உள்ளிட்ட ஆறு முக்கியமான துறைகளில் மாற்றங்களைப் பரிந்துரைக்கும் பணியை இந்த கமிஷன்கள் மேற்கொண்டன.
முப்பதுக்கும் மேற்பட்ட கட்சிகளின் கருத்துகளை இந்த ஆணையம் பெற்றுக்கொண்டது. நாற்பதுக்கும் மேற்பட்ட கூட்டங்கள் நடத்தப்பட்டு விவாதங்கள் நிகழ்ந்தன. அவற்றின் அடிப்படையில் ஒவ்வொரு துறையிலும் தேவைப்படும் சீர்திருத்தங்களுக்கான பரிந்துரைகள் எழுதப்பட்டன. அரசியலமைப்பில் 70, தேர்தல் நடைமுறைகளில் 27, நீதித்துறையில் 23, பொது நிர்வாகத்தில் 26, ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகளில் 27 சீர்திருத்தங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.














Add Comment