“அந்தப் பாட்டைப் பாடும்போது இருந்த ஒரு பதட்டம் எனக்கு என்றுமே இருந்ததில்லை. எப்பவும் அப்பா எப்படிச் சொல்றாரோ அப்படிப் பாடினாப் போதும். பாடிட்டு போயிடுவேன். ஆனா இந்தப் பாட்டின்போது என் உள்ளுணர்வில் இந்தப் பாட்டில் நான் ஏதாவது செய்துவிட வேண்டும் என்று தோன்றிக் கொண்டே இருந்தது. அந்த அளவு மனசு லேசா, சிலீர்னு இருந்தது. தனித்துவம் காட்ட வேண்டும் எனச் சில சங்கதிகளைப் போட்டுப் பாடினேன்”. அப்பா வந்து கேட்டார். “ஏம்பா என்ன பண்ற? நான் சொல்றமாதிரி, சொன்ன மாதிரி மட்டும் பாடு. ஒரு சின்னக் குழந்தை பாடற மாதிரி இருந்தா போதும். வெள்ளந்தித்தனம் இருக்கணும். மயிரிழை கூட நம்ம பாண்டித்யம் இருக்கக் கூடாது என்று சொன்னார். அப்படிப் பாடின பாட்டு தான் பாரதி படத்தில் வந்த, ‘மயில்போலப் பொண்ணு ஒண்ணு.”
தமிழ் இசை ரசிகர்களின் நெஞ்சை வருடிய இந்தப் பாட்டு நாடெங்கும் எதிரொலித்து அந்த வருடத்திற்கான தேசிய விருது பாட்டைப் பாடிய பெண்ணுக்குக் கிடைத்தது. அந்தப் பெண் தான் பவதாரிணி. பாட வைத்த அப்பா இளையராஜா.
இசைஞானி இளையராஜாவின் கச்சேரி கொழும்பில் உள்ள சுகததாசா மைதானத்தில் கடந்த சனி, மற்றும் ஞாயிறன்று நடக்க இருந்தது. அதற்காக அவர் சென்ற வாரமே இலங்கை சென்று விட்டார். ரிகர்சல் போய்க்கொண்டு இருந்தது. அந்நிலையில்தான் அந்தத் தகவல் இளையராஜாவை எட்டியது. புற்று நோயால் பாதிக்கப்பட்டுப் பல மாதங்களாகச் சிகிச்சையில் இருந்த அவரது செல்ல மகள் பவதாரிணி (வயது 47) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தி. அலோபதி மருத்துவர்களால் முடியாது எனக் கைவிடப்பட்ட நிலை. கடைசிக்கட்ட முயற்சியாக ஆயுர்வேத சிகிச்சைக்காகத் தனது கணவருடன் இலங்கையில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார் பவதாரிணி. தவிர்க்க முடியாததாக இருந்தாலும் நடக்க இருப்பதைத் தள்ளிப் போடப் போராடிக்கொண்டிருந்தனர் பவதாரிணியும் இளையராஜா குடும்பத்தினரும்.
Add Comment