நீலக் கொடி காட்டினால் என்ன பொருள்..? ‘நம்பி வரலாம்’ என்று அர்த்தம். அண்மையில் இலங்கையின் பன்னிரண்டு பிரதான கடற்கரைகள் நீலக் கொடி அங்கீகாரத்தைப் பெற்றுக் கொண்டுள்ளன. இந்தக் கொடி, சுற்றுலாத் தலங்களுக்கு, குறிப்பாக கடற்கரையோரங்களுக்குக் கிடைக்கும் சர்வதேச உத்தரவாதச் சின்னமாகும். சர்வதேசப் பயணிகள் ஓரிடத்துக்குப் போய் உல்லாசமாக இருப்பதற்கு சில அடிப்படைகளை எதிர்பார்ப்பார்கள். குறித்த தலத்தில் தாராளமாகக் குடிநீர் இருக்க வேண்டும். உயிருக்கு ஆபத்தான எதுவும் கூடவே கூடாது. சூழல் நேயமுள்ள இடமாகவும் நம்பிக் கால்வைக்க முடியுமாகவும் இருக்க வேண்டும்!
இலங்கைத் தீவினை மொத்தமாகச் சூழ்ந்திருக்கும் 1340 கிமீ நீளமான கடற்கரையில் தெரிவு செய்யப்பட்ட சில தலங்கள் எப்போதுமே வெள்ளைக்காரர்களால் நிரம்பி வழிகின்றன. ஐரோப்பாவின் குளிர்க் காலநிலையால் தொலைத்த சூரியக் கதகதப்பை தென்னாசியாவில் கண்டடைவதற்காக, வருடா வருடம் விமானம் ஏறி வருவோர் தொகை, பல மில்லியன்கள்! அதில் நேராக சிலோனைத் தழுவிக் கொள்பவர்கள், அதிகரித்துக் கொண்டே போகிறார்கள். 2024 அமோகமாக ஆரம்பித்திருக்கிறது இலங்கைச் சுற்றுலாத்துறைக்கு.
Add Comment